பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

கலைஞர் மு. கருணாநிதி


486 கலைஞர் மு. கருணாநிதி பொம்மை வணக்கத்திலேயே புதைந்து கிடக்கிறார்களே! அவர்கள் இன்னும் பரிநிருவாணம் அடைவதற்குரிய சரியான பாதையினைத் தேர்ந்தெடுத்திடவில்லையே! அவர்களுடைய இந்தத் தடுமாற்றமே எங்கள் மனத்தைப் புண்படுத்துகிறதே!' என்று பௌத்தர்களும் வாதிக்கலாம் அல்லவா? இது எப்படி இருக்கிறது தெரியுமா? புலால் உண்பவனைப் பார்த்து, 'அய்யோ! ஓர் உயிரைக் கொன்று இப்படி உண்கிறாயே! என் மனம் எவ்வளவு புண்படுகிறது தெரியுமா?' என்றானாம் புலால் மறுத்தவன். உடனே அவனை நோக்கி புலால் உண்பவன் 'அய்யோ! உன் உடல் எவ்வளவு இளைத்து விட்டது! இறைச்சி உண்டால்தானே உன் இளைத்த உடம்பு தேறும்! இல்லை யென்றால் விரைவிலேயே நாடி நரம்புகள் தளர்ந்து செயலற்று மடிந்திடு வாயே! உன் நிலையினைக் காண என் மனம் எவ்வளவு புண்படுகிறது தெரியுமா?' என்று கூறினானாம். அப்படித்தான் வேடிக்கையாக இருக் கிறது இந்தச் சமயவாதிகள் மனம் புண்படுவதாகப் பேசிடும் பொழுது! உண்மையான - அழுத்தமான சமயவாதியின் முதல் இலக்கணமே சகிப்பு உணர்ச்சிதான். அத்தகைய சகிப்பு உணர்ச்சியினால் பக்குவப்பட்ட சமயவாதி, பிறருடைய பழிப்பையோ எதிர்ப்பையோ பொருட்படுத் திடவே மாட்டான்; பொருட்படுத்திடவும் கூடாது. ஆகவே பௌத்தர் களால் மனம் புண்படுகிறது என்கின்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று. நீங்கள் மேலே தொடரலாம்..." என்றார் அவையத் தலைவர். பின்னர் புத்தபிக்கு தம் வாதத்தினைத் தொடங்கினார். "மேன்மை தங்கிய அறங்கூறு அவையத்தோரே! எனது நண்பர் சமணத் துறவியார் பசுமலை நிகழ்ச்சிக்கு இல்லாத காரணங்களை யெல்லாம் ஏராளமாக அடுக்கியதைக் கேட்டீர்கள். அவருடைய வழக்கும் சரி, வாதமும் சரி, எழுதாத பனுவலுக்கு எழிலான பாயிரம் என்பதைத் தவிர வேறென்ன? உண்மையிலேயே பசுமலை நிகழ்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்ன தெரியுமா?" என்று வினவி, சில நொடிகள் இடைவெளிவிட்டு, அந்த அறங்கூறு அவையம் முழுமை யையுமே தம் பார்வையினால் அளந்திட்ட அவர், “ஒரு பெண்! ஆம். ஒரு பெண்! அதுவும், சமண முனிவரான கனகநந்தி என்பவர் புகலிடம் கொடுத்து அவளை வெளியே அனுப்பிட முடியாது என்று வீராப்பாகப் பேசிடுகின்றாரே, அந்தப் பெண்!" என்று அழுத்தமாக மொழிந்திட்டார். குழுமியிருந்த அத்தனை பேருடைய விழிகளுமே வியப்பினால் விரிந்தன. எடுத்த எடுப்பிலேயே எல்லோரையும் திகைப்புக் கடலினில் திணறிடச் செய்துவிட்ட அந்தப் புத்த பிக்கு. தம்முடைய கூர்மையான வாதங்களை மிடுக்கான குரலில் மேலும் அடுக்கிடலானார்.