பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

கலைஞர் மு. கருணாநிதி


490 கலைஞர் மு. கருணாநிதி பொருளாகும். ஆகவே சமணத் துறவி அவர்கள் எங்கள் வழிபாட்டு முறைகளைப் பற்றி நுனிப்புல் மேய்ந்திட வேண்டாம். அதே வேளையில், எங்கள் நெறிகளிலேயே முரண்பாடுகள் தென்பட்டால் தாராளமாகக் கண்டிக்கட்டும். அவ்வாறு கண்டிப்பதாலேயே நாங்கள் ஒன்றும் 'வைதீக சமய த்தினரைப் போலக் குடியே முழுகி விட்டதாக இடிந்து போய்விட மாட்டோம். அவர்கள்தான் தங்களுடைய தத்துவங்களை - சாத்திரச் சடங்குகளை - யாராவது கடுகளவு கண்டித்தாலும் மலையளவு பெரிது படுத்தி அலறுவார்கள்; 'எங்கள் மனம் புண்படுகிறது... மனம் புண்படு கிறது...'என்றெல்லாம் ஓலமிடுவார்கள்; ஊரையே கூட்டுவார்கள். எனக்கு ஏற்படுகின்ற வேதனையும் வியப்பும் என்ன தெரியுமா? பௌத்த சமயத்தினராகிய எங்களைப்போல் 'எதையும் தாங்கும் இதயம்' படைத்திட வேண்டிய சமண சமயத்தினரே 'மனம் புண்படுகிறது' என்று கூசாமல் கூறுகிறார்களே என்பதுதான்; நற்காலமாக, அறங்கூறு அவையத் தலைவராகிய தாங்களே அதுபற்றித் தெளிவான தீர்ப்பினை வழங்கிவிட்டீர்கள். அதற்குமேல் நான் ஒன்றும் புதிதாக விரித்துரைக்கத் தேவையில்லை. அடுத்து, சமணத் துறவியார் சாட்டிய இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டுகள் எந்தவித ஆதாரங்களும் இல்லாதவை ஆகும். வெறும் வதந்திகளை மட்டும் நம்பி எழுப்பப்பட்ட மணல் வீடுகள் அவை! விளக்கமான முறையிலே அவற்றுக்கு மறுப்புத் தெரிவித்திடுமுன். ஒருவருடைய உண்மையான சாட்சியத்தைக் கேட்பது இன்றியமை யாதது என்று எண்ணுகிறேன். ஏனெனில், இந்த இரு குற்றசாட்டுகளுக்கும் பின்னணியாக எழுந்திட்ட பெரும் பூசலுக்கும் அவருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அவர் வேறு யாரும் அல்லர், பாண்டிய வேந்தரின் பேரன்புக்கு உரியவரும் அவர் தம் மெய்க்காவல் மறவருமான செழியன் அவர்களே. அவர்தான் கடைசி நேரத்தில் எங்கள் இரு சமயத்தினரும் குருதிக் குளத்திலே மிதந்திடாதவாறு அமைதியினை ஏற்படுத்தியவர். அவர் எத்தகைய சாட்சியம் அளித்திடினும் அதனை ஏற்பதற்கு நாங்கள் உடன்படுகிறோம்" என்று மொழிந்துவிட்டுப் புத்தபிக்கு அமர்ந்து விட்டார். செழியன் சாட்சியம் அளித்திடப் போகிறான் என்றதும் அந்த அவையத்தில் குழுமியிருந்த அத்தனை பேருடைய உள்ளத்திலும், ஏதோ புதுமையான பொருட்காட்சியினை கண்டிடப் போகும் ஆர்வம் ததும்பிற்று. காரிக்கண்ணனார். இளம்பெருவழுதி மற்றும் அமைச்சர்கள் முதலானோர் தத்தம் இருக்கைகளில் நிமிர்ந்து உட்கார்ந்து, கூர்ந்து கவனிக்க முற்பட்டனர்.