506
கலைஞர் மு. கருணாநிதி
செழியனின் விழிகள் இரண்டும் செக்கர் வானம் போல் சிவந்து பளபளத்தன. கண்ணீர் சுனைகளாகிக் கடகடவென்று நீரையும் பொழிந்து தள்ளின. ஏழ்மை ஒன்றினையே தோழமையாகக் கொண்டிட்ட தனக்கு - குடிப்பெருமை பேசிக் கும்மாளங்கொட்ட முடிந்திடாத தனக்கு இத்துணை கோலாகலமாக ஒரு வழியனுப்பு விழா நிகழ்ந்திடக் கூடுமென்று அவன் நினைத்ததே இல்லை. அதுவும், பெருவழுதிப் பாண்டியன் பிணியோடு போராடி அப்பொழுதுதான் தேறி எழுந்திட் டான். தன்பொருட்டே மதுரை மாநகரினின்றும் கொற்கை வரை வந்து வாழ்த்து மலர்களை வாரிச் சொரிந்திடுவான் என்று அவன் கனவிலும் கருதிடவில்லை. அளவிடற்கரிய பாசப்புனல், செழியனின் உள்ளத்தைப் புல்லரிக்க வைத்திட்டது. உடம்பையும் குன்றிடச் செய்திட்டது. அந்த நன்றியுணர்வின் வெளிப்பாடே கண்ணீர் அருவியாகி அவனது கன்ன மேட்டினில் தவழ்ந்து வழிந்தோடிற்று. தான் ஏறி நிற்கும் அந்த மாபெரும் மரக்கலம், நீலக்கடலினை உழுதுகொண்டு நெடுந்தொலைவு வந்திட்ட பின்னரும், செழியனின் பரந்த முகம் கொற்கைத் துறைமுகத்தினை நோக்கியே திரும்பி இருந்திட்டது. நினைவுகள் அனைத்துமே தமிழ் மண்ணைப் பற்றியே தழுவிக் கிடந்தன. . கடந்த ஒரு கிழமைக்கு முன்னர்கூடத் தான் இப்படியொரு நெடும் பயணத்தில் ஈடுபடக் கூடுமென்றோ, தனக்காக ஒரு பொறுப்பு மிக்க பெரும்பதவி காத்திருக்குமென்றோ செழியன் எண்ணிடவே இல்லை. அறங்கூறு அவையத்திலே அவன் சாட்சியம் அளித்திட்ட அன்று மாலை தான் யாரும் அருகினில் இல்லாத வேளையாகப் பார்த்துப் பாண்டிய வேந்தன் தம் முடிவினை அவனிடம் பகர்ந்தார். முதலில் அவனால் அதனை நம்பிடக்கூட முடியவில்லை. தம்முடைய மகன் இளம்பெரு வழுதிக்குக் குறுக்கே தளபதி நெடுமாறன் தடைச்சுவர்களை எழுப்புகின் றானே என்னும் ஆத்திரத்தில் அல்லது மன அலுக்கையில் தான் தன்னை அந்தத் தூதுவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாக மன்னன் வேடிக்கைக்காக மொழிகின்றானோ என்று கூட அவன் எண்ணினான்.