ரோமாபுரிப் பாண்டியன்
509
ரோமாபுரிப் பாண்டியன் - 509 "தாங்கள் உரைப்பது உண்மைதானா புலவர் அவர்களே' பதைபதைப்புடன் கேட்டான் செழியன். "இதுவும் என்ன, பாக்களில் வரக்கூடிய கற்பனைக் காட்சிகளில் ஒன்றாகத்தான் இருந்திடும் என்று எண்ணிவிட்டாயா செழியா? மெய்யாகவே இளவரசர்-தாமரையைக் காதலிக்கத்தான் காதலிக்கிறார். கொற்கையில் நிகழ்ந்திட்ட மொழிப் போரினைப் பற்றிப் புகாரிலிருந்து நாம் மதுரை வந்திடும்பொழுதே புகன்றேன் அல்லவா? அந்த அறப் போரில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே நம் இளவரசர் தம் இதயத் தினைக் கொள்ளை கொடுத்துவிட்டார் அந்தக் கோதையிடம்! முத்துநகை உடன் வந்ததால் அவர்களுடைய காதலைப் பற்றிய உண்மையை வெளிப்படையாக அப்போது உனக்கு நான் உரைத்திட விரும்பவில்லை” காரிக்கண்ணனார் இவ்வாறு கூறக் கூறத் தன்னை யாரோ கழுத்தினை நெறித்திடுவதாகவே நொந்து மடிந்திட்டான் செழியன். கரைகடந்திடும் வெள்ளத்தின் நடுவே தெப்பம் ஒன்று தென்பட்டாற் போல, 'இளவரசரின் காதல் வெறுங்கைக் கிளையாக இருந்திட்டால்?' என்னும் எண்ணம் முகிழ்ந்திட்டது மின்னலாக; ஆனால், அடுத்த நொடியே‘உம்! என்ன இருந்தாலும் அவளும் இளவரசி. அவனும் இள வரசன்; பொருத்தமான இணை! நானோ சாதாரண மறவன்! என்னை எப்படி அவள் ஏற்றுக் கொண்டிட இயலும்? என்னுடைய காதல்தான் 'கைக்கிளையாக இற்று ஒடிந்திட வேண்டும்' என்று எண்ணி நைந்திட்டான் அவன். 'அப்படியானால் அந்தத் தளிர்க்கொடியின் குளுகுளுப்பான கூரிய பார்வை, பன்னீர்ப்பூவின் மெல்லிய புன்னகை? காதினில் தேன் பாய்ச்சிய கனிவான மொழிகள் எல்லாமே நடிப்புத்தானா? நாடகந்தானா?' - பெருமூச்செறிவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது செழியனுக்கு? ஆனால் தாமரை இனி தனக்குக் கிட்டிடப் போவதில்லை என்னும் ஆறாத் துயரமே அவனது உள்ளத்தில் வெறுமையைத் தோற்றுவித்து, 'சரி; இந்தத் தமிழ் மண்ணிலே தங்கியிருந்து - தாமரையை இளம்பெருவழுதி யோடு சந்திக்கவும் நேர்ந்து - உள்ளுக்குள்ளேயே புழுங்கிச் சாவதைவிட வெளிநாடு சென்றிடுவது நல்லதுதான்!' என்னும் உறுதியான முடிவினை அவன் எடுத்திடவும் தூண்டியது. வெளியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு இவ்வாறு எத்தனையோ அவதூறுகளும் அபாண்டப் பழிகளும் அலைக்கழித்திட்ட போதிலும் - தன்னுடைய காதற் கோட்டை வெறும் கானல் நீராக, மணல் வீடாகச் சரிந்து விழுந்து தன் இதயப்பரப்பினையே சுக்கல் நூறாக இடிந்து