பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

கலைஞர் மு. கருணாநிதி


518 கலைஞர் மு. கருணாநிதி "இவள் யார்?" என்று தன் அருகில் நிற்கும் சிப்பியோவைத் தணிந்த குரலில் அவன் கேட்டு முடிப்பதற்குள் - ஆரணங்கின் அழகு மாலை, செழியனின் கழுத்தில் வந்து விழுந்து விட்டது! கரவொலிகள் விண்ணைப் பிளந்தன; இன்னிசைக் கருவிகள் பண்மாரி பொழிந்தன. மாலையை அணிவித்த அந்த மடந்தை அத்துடன் திரும்பிடவில்லை; வாழைக் குருத்தினையொத்த தன் வாளிப்பான பூங்கரத்தினால் செழியனின் கையை இறுக்கிப் பற்றிக் குலுக்கினாள். . "ரோமாபுரிப் பெருநாட்டின் ஆட்சித் தலைவர் அகஸ்டஸ் அவர்களின் சார்பிலே உவகைப் பெருக்குடன் உளமார வரவேற்கிறேன். தமிழ் வளர்த்திடும் பாண்டிய நாட்டின் தூதுவராக வந்திருக்கும் தங்களுக்கு எங்கள் மக்கள், செனேட், அரசாங்கம் ஆகிய எல்லாருடைய சார்பிலும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!' என்று அவள் இலத்தீனில் உரைத்திட்டவற்றை மொழிபெயர்த்திட்டான் அருகினில் நின்றிருந்த சிப்பியோ. - "தங்களுடைய சிறப்பு மிக்க வரவேற்புக்கு என் உளங்கனிந்த நன்றி! கலை, வாணிகம், பண்பாடு முதலான எல்லாத் துறைகளிலுமே தமிழகமும் ரோமாபுரியும் இணைந்து முன்னேறிட முடியும் என்கிற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மூவேந்தர்கள் உட்பட தமிழக மக்கள் அத்தனை பேருடைய நல்லெண்ணத்தையும் உரித்தாக்குகிறேன்" என்ற செழியனின் மறுமொழியையும் சிப்பியோ மொழி பெயர்த்திட்டான். சிறிது நேரத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்ட புரவிகள் பூட்டப்பெற்ற தேர் ஒன்றில் செழியன் ஏறி நின்றான். "நீங்களும் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதானே தேர் கடந்து சென்றிடும் ஒவ்வொரு முக்கியப்பகுதியைப் பற்றியும் அவருக்கு நீங்கள் விளக்கம் உரைத்திடலாம்!' என்று இலத்தீனில் கூறினாள் அந்த ஆரணங்கு. அவளுடைய வார்த்தைகளுக்கு இணங்க, சிப்பியோவும் செழியனுடன் ஏறி நின்றான். வாழ்த்தொலிகளுக்கிடையே - வரவேற்பு முழக்கங்களுக்கிடையே அந்த அழகான தேர் அசைந்து நகர்ந்திட்டது. ஆமாம், அந்தப் பெண் யார் என்று முன்பேகேட்டேன்; நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே!' என்று தன் ஆவலைக் கட்டுப்படுத்திட இயலாமல் சிப்பியோவை வினவினான் செழியன்.