526
கலைஞர் மு. கருணாநிதி
526 கலைஞர் மு.கருணாநிதி அந்தச் சிலையினை ஒட்டிக் கிடந்த இருக்கையில் அகஸ்டஸ், செழியன், லிவியா, ஜூலியா வந்து அமர்ந்தனர். அந்த இல்லத்தினில் பணியாற்றிடும் அகஸ்டஸின் அடிமைகளும், உரிமை மனிதர்களுமாகச் சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செழியனைப் பார்க்க முற்பட்டனர். சில விநாடிகளில் சிரியா நாட்டினில் தயாரான ‘சுவை நீர்' கொண்ட எகிப்து நாட்டுக் கண்ணாடிக் குவளைகள் அடங்கிய தட்டினை ஏந்தி வந்திட்டாள் ஒரு பணிப்பெண். அகஸ்டஸின் மனைவி, தானே அந்தச் சுவை நீரை எடுத்துச் செழியனிடம் நீட்டினாள்; மற்றவர்களுக்கும் வழங்கினாள். . அதனைப் பருகியவாறே பெருவழுதிப் பாண்டியன், கரிகாற்சோழன், சேரமாமன்னன் முதலானோரது நலன்கள் பற்றியும், தமிழகத்தின் வளங்கள், துறைமுகங்களின் சிறப்பு, வணிகப் பொருள்களுக்குப் பிற நாடுகளில் உள்ள வரவேற்பு முதலானவை பற்றியும் பரவலான முறையில் உரையாடினார் அகஸ்டஸ். அதே வேளையில் செழியனின் நெஞ்சிலோ அலைகளை எழுப்பிய வண்ணம் இருந்தது அந்தப் பெருவீரரின் பண்பு நலன். அது வேறொன்றும் இல்லை. அவரது எளிமையே! ரோமாபுரியைப் போன்ற ஒரு மாபெரும் பேரரசின் செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவராகத் திகழ்ந்திடும் அகஸ்டஸ், ஈடு இணையற்ற ஆடம்பரமான அரண்மனையில்தான் உறைந்திடுவார் என்றே கற்பனை செய்து வைத்திருந்தான் செழியன். நேரினில் வந்து பார்த்திட்ட பிறகோ, அவனுடைய இதயப்பரப்பு வியப்பினால் விம்மிப் புல்லரித்திட்டது. ஒரேயொரு உப்பரிகை மட்டுமே பூண்டதாக அவரது இல்லம் இத்துணை எளிமை மலிந்து இருந்திடக்கூடுமென்று அவன் எண்ணிடவே இல்லை. அந்த இல்லத்தில் மட்டுமின்றி அவருடைய நடை, உடை, பேச்சு, பழக்கம் எல்லாவற்றிலுமே எளிமை! எளிமை! பரந்த ரோமானியப் பேரரசு முழுவதும் படர்ந்து தழைத்தவண்ணம் உள்ள அகஸ்டசினுடைய செல்வாக்குத் தருவின் ஆணிவேர் எங்கே இருக்கிறது? அவர்தம் ஆண்மை மிக்க அரிமா வீரத்திலோ புதுமைச் சிந்தனைகளிலோ, முன்னேற்றத் திட்டங்களிலோ மட்டுமா அது அடங்கியுள்ளது? இல்லை! அவரது எளிமைப் பண்பாட்டிலேயே அது பொதிந்து பொலிகிறது என்பதனை நொடியில் புரிந்து கொண்டு விட்டான் செழியன். தன்னலக் கலப்பற்ற அடக்கம் நிறைந்திட்ட உண்மையான குடியரசுவாதியாக வெறுஞ்சொல்லில் மட்டுமின்றி எண்ணம் செயல் எல்லாவற்றிலுமே அவர் நடந்து காட்டுவதால்தான்