பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

529


ரோமாபுரிப் பாண்டியன் 529 இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும் 'நாடு-நாடு-மக்கள்-மக்கள் என்று வெளியுலகைப் பற்றித்தான் கவலைப்படுகிறாரே அன்றி வீட்டைப் பற்றியே சிந்திப்பதில்லை. இவருடைய மருமகனையும் (ஜூலியா அண்மையில் மணந்து கொண்ட அக்ரிபா) தம்மைப் போலவே பொதுநலப் பைத்தியமாக்கி வெளிநாடுகளுக்குப் போகுமாறு செய்து விட்டிருக்கிறார்." "ஓகோ! இதுதான் சரியான சமயம் என்று என்னைத் தாக்குகிறாயா? இரு, இரு! அக்ரிபா வந்ததும் அவனிடம் சொல்லி உன் வாய்க்குச் சரியாகப் பூட்டுப் போடச் சொல்கிறேன்!" என்று செல்லமாகக் கடிந்தவாறே செழியன் அளித்த பேழையினைத் திறந்திட்டார் அகஸ்டஸ். 'பளிச் பளிச்' சென்று முத்தாரங்கள் கண்களைப் பறித்தன. இலுப்பை மொட்டுக்களை கொண்டு சரந்தொடுத்திட்டாற் போல் எழிலினை வழியவிட்டன அவை! "ஓ! என்ன அருமை! என்ன அற்புதம்!" என்று நொடிக்கு ஒருமுறை கூவிடலானாள் லிவியா. "இவ்வளவு அழகான முத்துமாலைகளை நானும் இதுவரை பார்த்ததே இல்லை" என்று தன் மாற்றாந்தாயோடு சேர்ந்துகொண்டு ஜூலியாவும் தன் வியப்பினை வெளிப்படுத்தினாள். பேழையிலிருந்த முத்தாரங்களை ஒவ்வொன்றாக மேலே தூக்கி பார்த்திட்ட அகஸ்டஸ் செழியனை நோக்கி, “ஆமாம், எப்படி இவ்வளவு கணக்காக எங்களுக்கு மூன்று மாலைகள் தேவைப்படும் என்று கொண்டு வந்தீர்கள்? வியப்பாக இருக்கிறதே!' என்று சிரித்திட்டார். I "இதிலே கணக்கு ஒன்றும் இல்லை. 'பிரின்செப்ஸ்' அவர்களே! ஆனாலும் எங்கள் நாட்டிலே 'மூன்று' என்கிற எண்ணிக்கையில் ஒரு தனி ஈடுபாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. எங்களுடைய தமிழ் மொழியே இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. எங்கள் தமிழகப் பெருவேந்தர்களும் சேர, சோழ, பாண்டியர் என மூவர் ஆவர். எங்கள் கொடிகளும் கயல். புலி, வில் என மூன்று ஆகும். நாங்கள் உணவிலே விரும்பிச் சுவைத்திடும் கனிகளும் மா, பலா, வாழை என மூன்று ஆகும். "ஏதேது, இந்த மூன்று என்னும் எண்ணிக்கையிலே இந்த உலகிலுள்ள அத்தனைப் பொருள்களையும் அடக்கி விடுவீர்கள் போல் இருக்கிறதே! நல்லது. இப்போது இந்த முத்தாரங்களை உங்கள் சார்பிலே ஒவ்வொருவருக்கும் பரிசளிக்கட்டுமா?" என்றவாறே அகஸ்டஸ் ஒரு முத்தாரத்தை முதலில் தன் மனைவி லிவியாவிடம் நீட்டினார். இன்னொன்றை எடுத்துத் தன் மகள் ஜூலியாவிடம் வழங்கினார்.