பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

539


ரோமாபுரிப் பாண்டியன் 539 தனிமைச் சிறையில் சிக்கிவிட்ட செழியனுக்கு சிப்பியோ பேச்சுத் துணைக்கு இல்லாமற் போனது பெருங்குறையாக மனத்தினை வெறுமைப்படுத்தி வாட்டிற்று. இத்தனை நாட்களாக அங்கே இங்கே அசைந்திடாமல் அவனோடேயே ஒட்டிக் கொண்டு துணைபுரிந்திட்ட அந்த ரோமானிய இளைஞன் தன்னுடைய குடும்பத்தினரையும் போய்ப் பார்த்து வர வேண்டாமா? செழியனின் விழிகள் சட்டென்று கீழே சென்றன. அவன் தங்கியுள்ள இல்லத்தினை நோக்கி ஜூனோ வந்து கொண்டிருந்தாள். வேறு யாரோடும் அல்ல; தன்னந்தனியளாக! இயற்கைக் காட்சிகள் பரிமாறிடும் எழில் விருந்தினில் தன் விழிகளை மிதக்கவிட்டுக் கொண்டிருந்த செழியன். ஜூனோவைக் கண்டதும், அவளை வரவேற்றிடும் பொருட்டுத் தன் அறைக்குள் திரும்பினான். அவனது மனத்தினுள்ளே புதியதொரு சிக்கல் முளைத்து விட்டது; தனக்கோ இலத்தீன் மொழி தெரியாது. அவளுக்கோ தமிழ் தெரிந்திருக்க வழியில்லை. இந்நிலையில் இருவரும் எவ்வாறு நெடுநேரம் தனியாக உரையாடிட இயலும் என்பதே அந்தச் சிக்கல். இரண்டு, ஊமைகள் சந்தித்துக் கொண்டால் எட்டி இருந்து பார்ப்பவர்களுக்கு எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்! அத்தகைய சைகை நாடகத்தினைத்தான் நாங்கள் இருவரும் நடித்திட வேண்டுமோ? என்று எண்ணிய அளவில் உள்ளூர அவனால் சிரிக்காமல் இருந்திட முடியவில்லை. மேகங்களில் மிதந்து வரும் மணிப் புறாவினைப் போலச் சாம்பல் நிற உடைகள் அணிந்து, 'மெல்லியல்' என்னுஞ் சொல்லுக்கேற்ப மெல்ல வந்து சேர்ந்திட்டாள் ஜூனோ. அறையினுள் நுழைந்திட்ட அவள், அல்லி மொட்டாகத் தன் கரங்களைக் குவித்து வணக்கம் புரிந்திட்டாள். செழியனும் மறுவணக்கம் செய்தான். தன் எதிரே கிடந்திட்ட இருக்கையில் அமர்ந்திடுமாறு கையினால் சைகை காட்டினான். அவளோ உடனே அங்கு அமர்ந்திடவில்லை. அந்த இருக்கையின் அருகினில் வந்து அதனை ஒரு கரத்தினால் பற்றியவாறே அவனை நேருக்குநேர் நோக்கினாள்; இமைக்க மறந்து நோக்கினாள். முட்டை வடிவு கொண்ட முகப்பூ மலர்ந்திடத் தேன் சொட்டும் செவ் விதழ்கள் மெல்லவே விரிந்திட, வெள்ளரிவிதைப் பற்கள் வெள்ளிபோல் மின்னிச் சற்றே தெரிந்திடத் தலை சாய்த்துப் பார்த்திட்டாள். வாய் மலரைத்தான் திறந்து வார்த்தைத் தேன் சிந்தவில்லை. ஆயினும் அவள் விழிகள் ஆயிரம் கதைகள் பேசின!