ரோமாபுரிப் பாண்டியன்
543
ரோமாபுரிப் பாண்டியன் 6 543 திகைப்பின் நிழல் சட்டென்று தன் முகத்தினில் படிந்திட, "எதற்கு...எங்கே...?" என்று மென்று விழுங்கியவாறே கேட்டான் செழியன். 'களுக்' கென்று பாளைச் சிரிப்பொன்றை வெடித்திட்ட ஜூனோ, "ஏன், என்னோடு தனியாகப் புறப்படுவதற்குப் பயமாக இருக்கிறதா? உங்கள் முகமே மாறிவிட்டதே! எவ்வளவோ பெரிய வீரர் என்று கேள்விப்பட்டேன். இப்படி பயந்து சாகிறீர்களே! பரவாயில்லை; நான் உங்களை ஒன்றும் செய்துவிடமாட்டேன். நாம் இப்போது போகப் போவது எங்கள் ஆட்சித் தலைவரின் இல்லத்திற்கு, ஒரு விருந்திலே கலந்து கொள்வதற்கு!" என்று குறும்பு நெளிந்திட அவனை நோக்கினாள். “விருந்தா? எதற்கு?' "எங்கள் நாட்டுப் புகழ்மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல் வாதிகள், கலைவல்லுநர்கள் ஆகியோரை உங்களுக்கு அறிமுகப் படுத்திடவேண்டுமாம்... அதற்காகத்தான் தனியாக இந்த விருந்து" - ஜூனோ இவ்வாறு புதிரை அவிழ்த்த பின்னரே மனத்தெம்பு வந்தவனாக அவளோடு புறப்பட ஆயத்தமானான் செழியன். சிறிது நேரத்தில் ஓர் அலங்காரமான தேர் ஜூனோ, செழியன் இருவரையும் சுமந்து கொண்டு அகஸ்டசின் இல்லம் நோக்கி விரைந்தது. 'டிரிப்லினியம்' என்று அழைக்கப்படும் விருந்துக்கூடத்தில் அவர்கள் நுழைந்ததுமே, "ஏன், சிப்பியோ வரவில்லையா?" என்று வினவினார் அகஸ்டஸ். 'இல்லை, தம்முடைய பெற்றோரைக் கண்டு வருவதற்காகப் பிற்பகலிலேயே போய்விட்டாராம் அவர்" என்றாள் ஜூனோ. "விருந்திலே நான் அறிமுகம் செய்வதை உடனுக்குடன் மொழி பெயர்த்துக் கூறினால்தானே நம் தூதுவர் உடனுக்குடன் விளங்கிக் கொள்ள முடியும்?.... ம் ஒன்று செய்தால் என்ன? உனக்குத்தான் தமிழ் தெரியும் என்று சொன்னாயே!" "ஆம்..?" "அப்படியானால் நீயே மொழிபெயர்ப்பு வேலையை மேற்கொண்டு விடேன்!" "தங்கள் கட்டளைப்படியே மொழி பெயர்த்துக் கூறிட நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். ஆனால்..." 'என்ன ‘ஆனால்...? நம்முடைய விருந்துகளில் பொதுவாகப் பெண்கள் இருப்பதை நாம் அனுமதிப்பதே இல்லையே என்று தயங்குகிறாயா?"