பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548

கலைஞர் மு. கருணாநிதி


548 கலைஞர் மு. கருணாநிதி வளர்ச்சிக்காகக் கவிஞர் வெர்ஜிலைப் போன்றவர்களையும் ஆதரித்துத் தாங்கள் ஆற்றியுள்ள அரும்பணியை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை. அதற்காக அகஸ்டஸ் பெருமகனாரையே ஏதும் அறியாதவர் என்று பேசுவதா? "நம்முடைய அகஸ்டஸ் இந்த நாட்டின் காவலர் மட்டுமல்லர்; கவிதையிலும் அவர் கை தேர்ந்த சிற்பி!" என்று தாங்களே ஒரு முறைக்குப் பலமுறை அவரைப்பற்றி உயர்வாகப் புகழ்ந்திருக் கிறீர்கள். அன்று அப்படி வானளாவப் போற்றிவிட்டு இன்று இப்படி எடுத்தெறிந்து பேசிடலாமா என்று எண்ணிப் பார்த்திட வேண்டுகிறேன்." ஹொரேஸ் இவ்வாறு கூறியதும் அடுத்துக் கவிஞர் டிபுலெஸ் என்பவர் எழுந்தார். அவருக்கு இன்பியல் பாட்டுகளை பாடுவதை விட இரங்கற்பாக்களை - துன்பியல் செய்யுட்களை இயற்றுவதிலேயே தனி இன்பம். போர் என்றாலே உள்ளம் பொருமுகின்றவர். அமைதி என்றாலோ அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. மேசனஸ் எங்ஙனம் ஓர் இலக்கிய வட்டத்தை ஏற்படுத்தினாரோ அவ்வாறே அவருக்கு போட்டியாக வாலெரியஸ் மெசல்லா என்பவரும் பிறிதொரு இலக்கிய வட்டத்தை உருவாக்கினார். அந்தக் குழுவினைச் சார்ந்தவரே டிபுலெஸ். "எழுத்துலகின் ஆக்கத்திற்குப் பாடுபடும் வள்ளல் என்று புகழப்படும் மேசனஸ் அவர்கள், நம்முடைய ஆட்சித் தலைவரின் அறிவாற்றலைக் குறைத்து மதிப்பிடுவதை கண்டு-ஏன், எடை போடவே தெரியாமல் இருப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைகிறேன்; வெட்கப்படுகிறேன். இங்கே இல்லாத ஒருவரைப் பற்றி எதற்குப் பேசிட வேண்டும்? மேலும், நேற்றுவரை யாரைத் தூற்றினாரோ அவரையே இன்று எதற்காகப் போற்றிட வேண்டும். அதுவும், அயல்நாட்டுத் தூதுவர் ஒருவர் முன்னிலையில் நம்முடைய ஆட்சித் தலைவரைப் பற்றி நாமே இடித்துரைக்கலாமா? ஏளனப்படுத்தலாமா? ஆகவே, தம்முடைய ஆணவப் பேச்சுக்காக மேசனஸ் அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்டிட வேண்டும்" -டிபுலெஸ் இவ்வாறு அழுத்தமாக உரைத்திடவும் முதுபெருங்கவிஞர் வெர்ஜில் உட்பட அனைவருமே, "ஆம் ஆம்" என்று கூச்சலிட்டனர். விருந்து மண்டபமே அதிரும்படியான அந்த முழக்கத்தினைக் கேட்டதும் மேசனசுக்கும் ஆத்திரம் வந்து விட்டது. அதற்காகத் தம் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திடவும் அவர் ஆயத்தமாக இல்லை. "நான் எதற்காகவும் எவரிடத்தும் மன்னிப்புக் கேட்டிடத் தேவையே இல்லை. நீங்கள் அத்தனை பேரும் ஒன்று கூடினாலும் என்னை இம்மிகூட அசைத்திட முடியாது. உங்கள் சலசலப்புக்கெல்லாம் நானா அஞ்சுகிற வன்?" என்று அவர் விரைந்து அங்கிருந்து வெளியேறி விட்டார்.