562
கலைஞர் மு. கருணாநிதி
சற்றைக்கெல்லாம், வாசலில் காத்துக் கொண்டிருநத அழகிய தேர், ஜூனோ குறிப்பிட்ட வட்டக் கலையரங்கினை நோக்கி காற்றாய்ப் பறந்திட்டது. மக்களை மகிழ்ச்சி வெள்ளத்திலே ஆழ்த்திடும் அந்தக் கலையரங் கினுள் நுழைந்திட்டபொழுது, செழியனுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப் பெற்றது. பல செனேட்டர்கள் தமிழக முறைப்படி வணக்கம் புரிந்தனர். அகஸ்டஸ் பெருமகனோ, அவனுடைய கரத்தினைப்பற்றி, அழுத்தி குலுக்கித் தம் அருகிலேயே அமர்த்திக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் பின்புறமாகச் சற்று உயரமான இருக்கையில் மொழி பெயர்ப்பதற்கு ஏதுவாக உட்கார்ந்து கொண்டாள் ஜூனோ. 'காலரிகள்' புடைசூழத் தற்கால சர்க்கஸ் கூடாரங்கள் எப்படித் திகழ்கின்றனவோ அப்படிப்பட்ட அமைப்பினை ஓரளவு உடையதே அந்த வட்டக் கலையரங்கம். ஏறத்தாழ இருபதாயிரம் மக்களுக்கு மேல் குழுமி இருந்திடக்கூடும் என்று செழியன் தன் மனத்திற்குள் கணக்கிட்டுக் கொண்டான். கலையரங்கின் மையத்திலுள்ள அடித்தளத்தில், முதலில் மல்லர்கள் வீராவேசத்துடன் பொருதிட முற்பட்டனர். 'கிளேடியேட்டர்கள்' என்று அழைக்கப்பட்ட அம்மல்லர்கள்; சாதாரணப் பொதுமக்கள் சமூகத் தினையோ, செனேட்டர் போன்ற செல்வக் குடிகளையோ சார்ந்தவர்கள் அல்லர். சாவு அல்லது ஆயுள் தண்டனை போன்ற கடுமையான சிறைத் தண்டனை பெற்றவர்களிலிருந்தும், போர்க் கைதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அவர்கள். நாளாவட்டத்தில் அவசரகாலப் படைப் பயிற்சி பெற்றவர்களும் மல்லர்கள் ஆனார்கள். அன்று நடைபெற்றிட்ட மற்போரிலே சண்டை தொடங்கி அறை நாழிகைக்கெல்லாம் ஒரு மல்லன் இரங்கத்தக்க முறையில் கழுத்து நெரிக் கப்பட்டுக் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றவனை மெச்சிடும் வகையினில், பார்வையாளர்கள் அத்தனை பேரும் கரவொலிகள் எழுப்பி 'யே...யே.!' என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். இறந்துபோன மனிதனுக்காக ஒருவர் கூட இரங்காதது செழியனுக்குத் திடுக்கீடாக இருந்திட்டது. அடுத்துச் சிங்கத்திற்கும் மனிதனுக்குமிடையே போர் தொடங்கிற்று.