564
கலைஞர் மு. கருணாநிதி
564 கலைஞர் மு.கருணாநிதி இக்கட்டில் தள்ளித்திணறிடச் செய்துவிட்டோமே என்றும் வருந்திட லானான் அவன். - உடனே பின்புறமாகத் தன் முகத்தினைத் திருப்பி “எனக்கு என்ன நேர்ந்திடுமோ என்று அஞ்சி, அவருடைய அவநம்பிக்கைக்கு ஐயப்பாட்டுக்கு நீ ஆளாகி விடாதே! உன்னுடைய கடமையை நீ ஒழுங்காகச் செய்; ஊம்.. தயங்காதே!" என்று எச்சரித்திட்டான். அதற்குமேல் ஜூனோ நேரத்தை வீணாக்கிடவில்லை. தொண்டை யைக் கனைத்துக் கொண்டாள். ரோமானியர்களின் மிருக மனம் பற்றிச் செழியன் உணர்ச்சி வயப்பட்டு உரைத்தவற்றையெல்லாம் மடமட் வென்று மொழிபெயர்த்துத் தள்ளினாள். அவள் பகர்ந்து முடித்ததும், அகஸ்டசின் பரந்த முகத்தினிலே ஆத்திரம் படர்ந்திடவில்லை; அனலும் கொழுந்திடவில்லை; மாறாக ஆழ்ந்த சிந்தனையில் காலூன்றிய பொருட்செறிவோடு கூடிய புன்னகையே இழையோடிற்று! 1 "நீ தூதுவரைக் கவனித்துக் கொள்; அவருக்கு ஏதேனும் ஐயப்பாடு எழுந்திட்டால் அதனைத் தெளிவுபடுத்து" என்று இயம்பிவிட்டு மெல்ல நகர்ந்திட்டார் அகஸ்டஸ். அடித்தளத்தில் நிகழ்ந்திடும் விலங்குச் சண்டைகளை வேடிக்கை பார்ப்பதில் முழுமையாக - மும்முரமாக ஈடுபட்டு இருந்தமையால், பார்வையாளர்கள் யாரும் அகஸ்டஸ் அந்த அரங்கத்தினைவிட்டு வெளி யேறியதைக் கவனித்திடவில்லை. கீழே இப்போது வெள்ளை யானை ஒன்று பல விந்தைகளைப் புரிந்த வண்ணம் இருந்தது. "இந்த யானை ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து வந்ததா?" என்று வினவினான் செழியன். ஆமாம். என்றாள் ஜூனோ. 'ஆப்பிரிக்கா'என்னும் சொல் தன் செவியினில் விழுந்ததால் ஏற்பட்ட ஏதோ ஓர் எண்ணக் குறுகுறுப்பினால் - "தூதுவர் என்ன கேட்டார்?” என்று ஜூனோவை நோக்கினாள் லிவியா. செழியனின் வினாவினை அவள் மொழிபெயர்த்துக் கூறினாள். உடனே, "இது ஆப்பிரிக்க யானை இல்லை; இது சயாம் நாட்டுக் காட் டைச் சார்ந்தது. அண்மையில்தான் தனி ஏற்பாடுகளுடன் என் கணவர் இதனை வரவழைத்தார்' என்று விளக்கமளித்திட்டாள் அகஸ்டசின் மனைவி.