பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

கலைஞர் மு. கருணாநிதி


576 கலைஞர் மு. கருணாநிதி தலைவரைப் பற்றி அவர்கள் அவ்வாறு கருதிடக் காரணமே, அவர் படை அணிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்திட்டதுதான். ஒரு காலத்தில் இந்த நாட்டில் அறுபது 'லீஜன்'கள் வரை இருந்தன. ஆனால் இன்றைக்கோ நாற்பது - முப்பது - என்று குறைந்து கொண்டே வந்து விட்டன.' ஒரு 'லீஜன்' என்றால் ஒருபடை அணி அல்லவா? அதிலே சாதாரணமாக எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?" "ஐயாயிரம் பேர் இருப்பார்கள்" "ஆமாம். அகஸ்டஸ் ஏன் இப்படிப் படைக் குறைப்பைச் செய்திட்டார்?" "அமைதியின் மீதுள்ள ஆர்வந்தான். அடிக்கடி சண்டைகளில் ஈடுபட் டுக்கொண்டே இருந்தால் மக்கள் பலர் கொடூரமாக மாள்கிறார்களே என்பது ஒருபுறம் இருக்க, நாட்டுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை வழங்கிட முடியாதல்லவா? கலை, இலக்கியம் முதலானவற்றை வளர்த்திடவும் முடியாதல்லவா? அதனால் தான் போர் என்றாலே வெறுக்கத் தலைப்பட்டுவிட்டார் அகஸ்டஸ்." "நீங்கள் சொல்வதைக் கேட்டிடும்பொழுது நாவலந்தீவின் வடப் புலத்தினில் கோலோச்சிய அசோக மன்னனின் நினைவே வருகின்றது. என்றாலும் குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்; அப்படியே கூர்வாளைக் கூர்வாளால்தான் சந்திக்க வேண்டும். அதனை விடுத்துக் கூர்வாளைக் குச்சியால் சந்திக்கலாமா? அதனால்தான் விட்டுக் கொடுத் தல் - பொறுத்துக் கொள்ளல் - பகைமைக்குப் பரிசாகப் பாசத்தை அளித்தல் முதலான பண்பு நலன்களையே பலவீனங்களாகக் கருதிடுகின் றனர் சிலர். ஆமாம், இப்போது நம் அகஸ்டஸ் பெருமகனாரைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினால் என்ன?" "உங்கள் கைக்கும் மற்றக் காயங்களுக்கும் முதலில் சிகிச்சை செய்து விட்டுப் பிறகு அவரை நாம் சந்திக்கலாம். ஏனென்றால் இப்போதே நன்றாக இருட்டி விட்டது; விளக்கு வைத்திட்ட பிறகு பெரும்பாலான ரோமானியர்கள் நெடுநேரம் விழித்திருக்க மாட்டார்கள். நம்முடைய மருத்துவரும் உறங்கிப் போய்விட்டால் என்ன செய்வது?" "ஏன், உறங்கியவரைத் தட்டி எழுப்பினால் விழித்துக் கொள்ள மாட்டாரா என்ன?” என்று செழியன் சிரித்திட்டான். “விழித்துக் கொள்வார். ஆனால் தூக்கக் கலக்கத்தில் மருந்தினைப் பூசுவதாக நினைத்துக்கொண்டு மணலை எடுத்துத் தூவி விட்டால் என்ன செய்வது?' என்று சிப்பியோவும் நகைத்திட்டான். இருவரும் தேரினை அடைந்து ஏறிக் கொண்டனர். சற்றைக்கெல்லாம் ஒரு மருத்துவரின் இல்லத்து வாசலில் போய் நின்றது தேர்.