பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582

கலைஞர் மு. கருணாநிதி


செழியனும் சிப்பியோவும் ஏறி வந்திட்ட தேர், அகஸ்டஸின் இல்லத்தினை அணுகிய பொழுது, அங்கு ஒரே பரபரப்பு நிலவிற்று. தலையினைக் குனிந்து, தன் முழங்கால்களிலே முகத்தினைப் புதைத்திட்டவாறே விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள் ஜூனோ. 'அவள் ஏன் இப்படி அழுகிறாள்? ஒருவேளை அகஸ்டசுக்குத்தான் ஏதாவது?' என்று திடுக்கிட்டுப் போனான் செழியன். தன்னை மறந்து அழுகையில் அழுந்திக் கிடந்திட்ட ஜூனோ தனக்கு மிக அருகினில் தேர் நெருங்கிவிட்ட பிறகே ஏதோ ஒலி கேட்கிறதே என்னும் உணர்வினைப் பெற்றவளாகத் தலைநிமிர்ந்து பார்த்திட்டாள். செழியன் - சிப்பியோ இருவருடைய உருவங்களைக் கண்டதும் அவளது உள்ளத்தினை நெருப்பிலே தள்ளிய துயரச்சுமை கரைந்திட்டது. கவலையிருள் மறைந்திட்டது; துள்ளிக் குதித்தோடினாள் இளங்கன்றாக. தேரினைவிட்டுக் கீழே இறங்கிடும் ஆணழகனை - தமிழகத் தூதுவனை · அள்ளித் தழுவிக்கொண்டாள் ஆர்வத்தோடு. அவனுடைய பரந்த மார்பினிலே அவளது முகமலர் பதிந்திட்டது. விழிச்சுனையிலிருந்தோ கண்ணீர் அருவி சூடேறிய இன்பப் பாலின் நுரைச் சிதறலாக வழிந்து கொட்டியது. அவள் இதுகாறும் அழுது புலம்பியது தன்னைக் காணாமல் தான் என்பதனை விரைவில் உணர்ந்து கொண்டான் செழியன். அவளுடைய அணைப்பினின்றும் மெல்ல விடுபட முயன்றிட்ட வனாக அவளது தலையினை நிமிர்த்தி, "அகஸ்டசுக்கு ஏதாவது பேராபத்தா?" என்று பதற்றத்துடன் வினவினான். "உங்களைக் காணோமே, என்ன நேரிட்டதோ என்கிற இதயத் துடிப்பினைத் தவிர, அவருக்கு வேறு எந்த ஆபத்தும் இல்லை. உங்களை எங்கெல்லாம் தேடுவது? மேசனசின் ஆட்களை விரட்டிவிட்டபிறகு நீங்கள் எங்கேதான் போனீர்கள்?" என்று விசும்பலுக்கிடையே விடையிறுத்ததுடன் மறு கேள்வியும் தொடுத்திட முயன்றாள் ஜூனோ. “காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவரிடம் சென்றிருந தோம். ஆமாம். மேசனசின் ஆட்களை விரட்டிவிட்டோம் என்பது உனக்கு எப்படித் தெரியும்?'