592
கலைஞர் மு. கருணாநிதி
592 கலைஞர் மு. கருணாநிதி தலைநகரத்தின் வாயில் முகப்பினை வந்தடைந்திட்ட பெருந் தேரினை விட்டுக் கீழே இறங்கியதுமே, கரிகாலனின் கழுத்தினிலே பட்டத்து யானை ஆள் உயர மாலை ஒன்றினைச் சூட்டியது. முரசங்கள் முழங்கின. பறைகள் அதிர்ந்தன. யாழும் குழலுமோ போட்டியிட்டுக் கொண்டு இசையருவியை ழியவிட்டன! இத்தகைய கோலாகலமான வரவேற்பு அதுவும் அந்த நேரத்தில் - கு வழங்கப்பெறும் என்று கரிகாலன் எதிர்பார்த்திடவே இல்லை. தளபதி நெடுமாறன், கரங்கூப்பித் தொழுது அரசனை வரவேற்ற வாறே, "தாங்கள் இந்த யானையின் மீதே ஏறிக் கொள்ளலாம்” என்று பணிவுடன் வேண்டிக்கொண்டான். "முதலில் பாண்டியப் பேரரசரின் உடல்நலம் எவ்வாறுள்ளது என் பதைப் பற்றிக் கூறுங்கள்" என்று ஆர்வத்துடிப்புடன் வினவினான் சோழ மாமன்னன். "அப்படி நம்பிக்கை போய்விடக்கூடிய நிலை இல்லை; வெறும் வாதநோய்தானே! அத்துணை விரைவில் ஒன்றும் ஆகிவிடாது! - அலட்சியச் சிரிப்புடன் நெடுமாறன் இவ்வாறு உரைத்ததைக் கேட்டுக் கரிகாலன் ஒருகணம் திகைத்துப் போனான். 'எவ்வளவு கபடு நிறைந் தவன் இவன்! மன்னரின் உயிரை மதிக்காமல் எத்துணை எளிதாகப் பேசுகிறான்!' என்று உள்ளூர எண்ணிக் கொண்ட கரிகாலன், ஒரு குறுஞ் சிரிப்பினை முகத்தினில் தவழவிட்டவாறே, தன் திருவடிகளை எடுத்து வைத்து நகரினுள் நுழைந்திடலானான். "தாங்கள் யானைமீதே வலம் வருவதற்குத்தான் இந்த ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்துள்ளேன். அப்பொழுதுதான் எங்கள் தலைநகரத்து மக்களும் தங்களைக் கண்டு களிப்பார்கள்" என்று மீண்டும் மொழிந்திட்டான் நெடுமாறன். அவனுடைய ஆசை என்ன தெரியுமா? 'யானையின் முதுகிலுள்ள அழகிய - சிறிய கொலு மண்டபம் போன்ற இருக்கையிலே கரிகாலன் அமர்ந்து கொள்வார்; அவருக்கு அருகிலேயே தானும் அமர்ந்திடலாம். சோழப் பேரரசனைக் கண்டு களித்திடும் மக்கள் தன்னையும் நன்கு நோக்குவார்கள். பெருவழுதிப் பாண்டியன் மறைவுக்குப் பின்னர் தான் ஊர்வலம் வருவதற்கு இந்த ஊர்வலமே ஒரு வெள்ளோட்டம் ஆகத்தான் அமையட்டுமே!'