பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650

கலைஞர் மு. கருணாநிதி


கரிகாலன் இறுதி முறியினைத் தொடர்ந்து படித்தான்; “அங்ஙனமாயின் இளம்பெருவழுதி யார் என்கிற கேள்வி எழுந்திடு வது இயற்கை. அவன் எனக்குப் பிறந்திட்ட மகனே அல்லன். இந்தப் பேருண்மையினை - அவன் கொற்கைப் பட்டினத்து இளவரசனாக ஆக்கப்பட்ட பின்னர் - தான் இறந்திடும் தறுவாயில்தான், என் மனைவி பெருங்கோப்பெண்டு என்னிடம் தெரிவித்தாள். பிள்ளை பெறாத மலடி என்னும் காரணம் காட்டி. நான் எங்கே இரண்டாந்தாரமாக அந்த முல்லைக்கொடியாளையோ வேறு எவளையோ மணந்திடு வேனோ என்னும் அச்சங்கொண்டிட்ட அவள், தான் கருத்தரித் திட்டதாகப் பொய்யே புகன்றிருக்கிறாள். தாழ்த்தப்பட்ட குடியொன்றின் பஞ்சம் பட்டினியைப் பயன்படுத்தி நிறையக் கழஞ்சுப் பொன்களை அவர் களுக்கு வாரி வழங்கி இளம்பெருவழுதியை எனக்குத் தெரியாமல் தத்து எடுத்துத் தன் பிள்ளையாகவே வளர்த்திருக்கிறாள் அரசி. சாவினைத் தழுவிடும்பொழுது, அவளது மனச்சாட்சி விழித்துக் கொண்டு உண்மை களைக் கக்கிட வைத்துள்ளது. செழியனைப் பற்றிய உண்மைகளை அவனைப் பாசத்தோடு வளர்த்திட்ட மீனவ மூதாட்டியே என்னிடம் வந்து வெளிப்படுத்திவிட்டாள். அதுவும் அண்மைக் காலத்தில்தான், நிலைமைகள் இவ்வாறிருக்க நெடுமாறனோ எனக்குப் பின்னர், தானே அரியணை ஏறிட வேண்டும் என்னும் ஆசையினை வளர்த்துக் கொண்டு, அதனை நேரடியாகவும் என்னிடம் கூறிவிட்டான். அவன் இச்சைப்படி இறுதிமுறி - எழுதக்கூடாது என்பதற்காகவே, என் வலக்கரம் முடக்குவாத நோய்க்கு இலக்காகிவிட்டதாக நான் நடித்திட நேர்ந்திட் டது. உண்மையில் என்னை வாட்டியது எலும்புருக்கி நோய் ஒன்றுதான். மேற்கூறியவற்றால், இந்த பாண்டியநாட்டின் மன்னனாக எனக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக் கொள்ளும் உரிமை எனக்கும் முல்லைக்கொடி யாளுக்கும் பிறந்திட்ட செழியனுக்கே உண்டு என்பதனை இதன் மூலம் தெளிவுபடுத்திட விழைகின்றேன்..." -கரிகாலன் இவ்வாறு இறுதிமுறியினைப் படித்து முடித்திடப் போகும் சமயம் தளபதி நெடுமாறன் எழுந்து குறுக்கிட்டான்; "செழியனைப் பற்றிப் பெருவழுதிப்பாண்டியர் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் வெறுங்கதைகளாகத்தான் தோன்றுகின்றனவே அன்றி .