பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கலைஞர் மு. கருணாநிதி


கரிகாலன் சிரித்துக் கொண்டான். கைதட்டி மெய்க் காப்பாளனைக் கூப்பிட்டான். முத்துநகையை அழைத்துப் போய் யாருக்கும் தெரியாமல் அவள் கேட்பதைக் கொடுத்தனுப்ப உத்தரவிட்டான். முத்துநகை, சோழனிடம் விடை பெற்றுக் கொள்ளும்போது, தன் தந்தையின் காதில் இந்தச் செய்தியைப் போட்டுவிடக் கூடாதென்று கெஞ்சிக் கேட்டாள். அவனும், "கரிகாலன் வாக்குத் தவற மாட்டான்." என்று அவளைப் பார்த்துக் கனிவோடு உறுதி தந்தான். ஆபத்தான வேலையில், தடுத்தும் கேளாமல் அடியெடுத்து வைக்கிற அவளுக்கு அவன் நல்ல எச்சரிக்கை தந்து அனுப்பி வைத்தான்.

அவள் போனதும் கரிகாலனுக்கு ஒரே குழப்பம். புலவருக்கும் தெரியாமல் முத்துநகை இந்தக் காரியத்தில் ஈடுபட்டது ஏன்? - என்ற கேள்வி அவனைக் குடைந்தது. "தந்தை தடுத்து விடுவார்! அதனால்தான் அவருக்குத் தெரியக்கூடாது" என்று முத்துநகை கூறிய சமாதானம் அவ்வளவு போதுமானதாக அவனுக்குப் படவில்லை. அப்பாவைப் பற்றிக்கூட ஆச்சரியமான செய்திகள் கேள்விப்படுவீர்கள் என்று அவள் கூறியதும். "தோகை மயில்" "முள்ளம் பன்றி" என்ற வார்த்தைகளும் அவன் நெஞ்சிலே உருண்டோடின.

இப்படி அரசனுக்குக் குழப்பத்தையும், புலவருக்கு அதிர்ச்சியையும் உண்டாக்கிவிட்டு, முத்துநகை வாட்ட சாட்டமான குதிரையொன்றில், வீரன் உடையில், காட்டுப் பாதையில் கடும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய முதல் இலட்சியம், செழியன் எங்கு கொண்டு செல்லப்பட்டான் என்று கண்டுபிடிப்பது, அதற்காகவே அவள் காட்டுப்பாதையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தாள். இருங்கோவேளும் அவனது ஆட்களும் காடுகளில் தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவள் கேள்விப்பட்டதை வைத்து அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். நெடுநேரம் குதிரையை விரட்டியதால் அதுவும் களைத்துத் தானும் களைத்துக் கடைசியில் காட்டிலுள்ள ஒரு சுனையின் அருகே இறங்கினாள். சுனையில் நீர் அருந்தி, குதிரையையும் மேய விட்டு விட்டுக் கொஞ்சம் காலாற்றிக் கொள்ள இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது சிறிது தொலைவில் யாரோ வரும் சந்தடி கேட்டது. பாறைகளைப் போல் அமைந்து காட்டாற்று நீரை வழியவிட்டுக் கொண்டிருக்கும் இரண்டு பெருங்கற்களுக்கிடையே நின்று உற்றுக் கவனித்தாள். ஒரு அழகான யுவதி; அங்கமெல்லாம் தங்கநிறம் பெற்ற தளிர்க்கொடி! ஆடியசைந்து அந்தச் சுனையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.