பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

75


அதனால் அவள் தன் குரல் மூலம் தானே தன்னைக் காட்டிக் கொடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஊமைபோல் நடந்துகொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டாள். மெதுவாக அந்தப் பெண்ணின் அருகே சென்று கைஜாடை செய்து “நீ யார்?” என்று கேட்டாள்.

அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. புன்னகை புரிந்தவாறு. கன்னங்கள் சிவக்க, "வலிக்கிறதே." என்று கழுத்து அழுவதையும் பொருட்படுத்தாமல் குனிந்து கொண்டாள்.

முத்துநகை அவளது முகவாய்க் கட்டையைத் தன் கையால் திருப்பித் தன் முகத்தை அசைத்தவாறு ஊமைச் சைகையில் மறுபடியும் கேட்டாள் யாரென்று.

அந்தப் பெண் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட நகர்ந்து சென்று, ஓடி நின்று, முத்துநகையைப் பார்த்து, "ஏன் உங்களுக்குப் பேசத் தெரியாதா?" என்று வீணைத் தந்தி அதிர்ந்தது போன்ற தொனியில் கேள்வி யொன்றைத் தொடுத்தாள்.

கேட்டதும் முத்துநகை, இடையில் செருகியிருந்த ஓலைகளில் ஒன்றையெடுத்து, ஏதோ அவசர அவசரமாக எழுதினாள். அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். அவள் அந்த ஓலையை வெட்கத்தோடு கரம் நீட்டி வாங்கிப் படித்துப் பார்த்தாள்.

"நான் ஒரு இலட்சியத்திற்காகப் பேசாத நோன்பு கடைப்பிடித்து வருகிறேன்; அந்த இலட்சியம் இன்னும் சில காலத்தில் நிறைவேறி விடும். அதற்குப் பிறகே நான் ஊமை நிலையிலிருந்து விடுபடுவேன்" என்று எழுதப் பட்டிருந்த அந்த வாசகம் அவளுக்குப் பேராச்சரியத்தை உண்டாக்கியது.

"உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள் அவள்.

உடனே முத்துநகை தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து, அதில் கோக்கப்பட்டிருந்த முத்துக்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினாள்.

"ஓகோ-முத்துவா உங்கள் பெயர்!" என்றாள் அவள்.

முத்துநகையும் "ஆம்" என்பது போல் தலையசைத்து விட்டு “உன் பெயர் என்ன?" என்ற கேள்வியை விரல் மூலம் கேட்டாள்.

அதற்கு அந்தப் பெண் உடனே பதில் சொல்லி விடவில்லை. அவள் கண்கள் கலங்கிவிட்டன. முகம் கறுத்து விட்டது. தலையில் கை வைத்தவாறு திரும்பிக் கொண்டாள். முத்துநகை அவளை விடவில்லை. அருகே சென்று அவளது தோளில் கை வைத்து திருப்பினாள். அந்தச்