பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கலைஞர் மு. கருணாநிதி


செய்கை அந்தப் பாவைக்கு எப்படிப்பட்ட இன்ப உணர்ச்சியை அளித்தது தெரியுமா?

ஆனாலும் அழுதவாறு முத்துநகையை நோக்கி "உங்கள் இலட்சியம் என்ன?" என்று கேட்டாள். “சொல்ல முடியாது" என்று சைகை மூலம் தெரிவித்தாள் முத்துநகை.

"உங்கள் இலட்சியத்தைத் தெரிவித்தால்தான் என் பெயரைச் சொல்லுவேன்!" என்று கண்ணீர் விட்டவாறு அவள் கூறினாள்.

முத்துநகை கீழே குனிந்து பார்த்தாள். சுற்றும் முற்றும் நோக்கினாள். இறுதியில் அவள் தேடியது கிடைத்தது. ஆமாம். ஒரு கரித்துண்டு! அந்தக் கரித்துண்டைக் காட்டி "இது என்ன?" என்றாள் ஊமை ஜாடையில்!

"கரி!" என்றாள் அந்தக் கட்டழகி.

பிறகு முத்துநகை தன் காலைக் காட்டிக் கேட்டாள் அவள் "இது கால்" என்றாள்.

இரண்டையும் சேர்த்துக் காட்டி முத்துநகை, மறுபடியும் கேள்வியை ஜாடை மூலமாக எழுப்பினாள்.

"கரி -கால்... கரி கால்... கரிகால். ஆமாம்; கரிகால் சோழன்! அவனுக்கு என்ன?" ஆவலுடன் கேட்டாள் அந்தப் பெண்.

முத்துநகையோ, சிரித்துக்கொண்டே வாளை உருவிப் பழி தீர்ப்பதுபோல உயர்த்திக் காட்டினாள்.

"கரிகால் சோழனைப் பழி வாங்குவதுதான் இலட்சியமா?"- சிறிது சத்தம் போட்டே கேட்டாள் அந்தப் பாவை!

முத்துநகை, "ஆமாம்" என்பது போல் தலையை ஆவேசமாக ஆட்டிக் கண்களை உருட்டி விழித்துப் பழி வாங்கும் உணர்ச்சிக்கு ஏற்றாற்போல் நடித்தாள். நடித்தவள் சும்மாயிருக்கவில்லை; "இப்போது சொல் உன் பெயர் என்ன?" என்ற பழைய கேள்விக்கணையை மீண்டும் பூட்டினாள்.

"என் பெயர் தாமரை! என்னிடம் இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள்!" என்று அந்தப் பெண் சொல்லி முடிப்பதற்குள் விம்மி விம்மி அழுது விட்டாள்.

முத்துநகைக்கோ ஒரே பயம்! எங்கே திடீரென்று வாய் தவறிப் பேசி விடுவோமோ என்ற பயம்தான் அது! அதற்காக ஒவ்வொரு பொழுதும் தன்னை எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டாள். தாமரையிடம் ஏதாவது தகவல் கிடைக்கக்கூடும் என்ற அவளது எண்ணம் வலுப்பெற்றது. காரணம், கரிகாற்சோழனை நான் பழி வாங்கப்