பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ளைத்துப் போன குதிரை ஆடி அசைந்து நடந்தது. அவளும் பெருமூச்சு விட்டவாறு சோர்வுற்று உட்கார்ந்திருந்தாள். தாமரையையும் வேறு சில பெண்களையும் சந்தித்தது; யவனக் கிழவரிடம் சிக்கியது இவையிரண்டையும் எண்ணிப் பார்க்கும்போது இருங்கோவேளின் இருப்பிடம் அந்தப் பகுதியில்தான் இருக்க வேண்டுமென்றும்; அந்தப் பெண்கள் இருங்கோவேள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்றும் அவள் தீர்மானித்தாள். அவர்களிடம் செழியன் அகப்பட்டிருப்பான். அவனை என்ன பாடுபடுத்துவார்களோ என்ற கவலையும், இந்நேரம் அவனை என்னென்ன செய்திருப்பார்களோ என்ற அச்சமும் அவளைக் கலங்கச் செய்தன.

அந்த இளம் பெண்ணுள்ளத்தில் சோழப் பெருநாட்டு எதிர்காலம் பற்றிய நினைவுகள் சுழன்றோடி, அவளை அறியாமலே ஒரு வெற்றுச் சிரிப்பை வரவழைத்தன. கரிகால் பெருவளத்தான் திண்தோள் கொண்ட பெருந்தீரன். அவனிடமுள்ள படைகளோ, யாராலும் வெல்ல முடியாத பலங்கொண்டவை. அப்படிப்பட்ட ஆற்றலுடையவனைச் சதித் திட்டத்திலிருந்து காப்பாற்றும் பொறுப்புத் தன்னிடம் விடப்பட்டிருப்பதை எண்ணித்தான் அந்தச் சிரிப்பு வெளிப்பட்டது முத்துநகைக்கு!

நீண்ட நெடுநேரங்கழித்து, இறுதியில் புகார் பட்டினத்தின் விளிம்புக்கே வந்து விட்டாள்.

குதிரை மருவூர்ப்பாக்கத்தின் எல்லையை மிதித்தது. வணிகர்களும் ஏனைய தொழில் வல்லாரும் பரபரப்புடன் தங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வீதியோரத்தில் முத்துநகை இருமருங்கிலும் கண் பார்வையைச் செலுத்தியவாறு போய்க் கொண்டிருந்தாள். அவளது, காதில் "அன்பே சிவம்! பண்பே சைவம்!" என்ற முழக்கம் கேட்டது.

குதிரையை நிறுத்திவிட்டுக் கவனித்தாள். பத்துப் பதினைந்து சிவனடியார்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். முத்துநகைக்குத் தூக்கி வாரிப்போட்டது. செழியனைத் தூக்கிச் சென்றதுபோல் வேறு