ரோமாபுரிப் பாண்டியன்
81
ஏதோ சூழ்ச்சியில் ஈடுபட இருங்கோவேளின் ஆட்கள் ஊரில் நடமாடுகிறார்கள் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.
முத்துநகை, அடியார் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றாள். அவர்கள் மருவூர்ப்பாக்கத்தில் எல்லா வீடுகளிலும் சென்று சைவ முழக்கம் செய்தனர். சில பெரிய வீடுகளில் அவர்கள் நுழைந்து பொருள் பெற்று பூரிப்போடு வெளியே வந்தனர்.
முத்துநகைக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. துரோகிகள் தாங்கியிருக்கும் தூய்மையான வேடம் பற்றி அவள் உள்ளத்தில் பெரும் போராட்டம்; எப்படியும் இன்று அவர்கள் முயற்சியைப் பலிக்காமல் செய்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டாள். நாட்டைக் கவிழ்ப்பதற்கு வேடமிட்டுத் திரியும் வேங்கைகளின் உண்மை உருவத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் சோழத் திருநகரின் மக்கள் ஏமாளிகளாய் இருக்கிறார்களேயென்று அவள் மனம் வெதும்பினாள். வாசனைப் பொடியும் குங்குமக் குழம்பும், சந்தனமும், நறுமணப் புகைப் பொருள்களும் கையிலேந்தி விற்பவர்களுக்கும்-அவைகளை வாங்கி மகிழ்கின்றவர்களுக்கும் இடையே முற்றும் துறந்தவர்களைப் போல அந்த அடியார்கள் சென்றது, அவளுக்குப் பெருஞ்சினத்தை மூட்டியது. பட்டும் பவளமும் பொன்னும் மணியும் முத்தும் பொருந்திய அழகு மிழும் அணிகலன்களை விற்பவர்களிடையே கொட்டை கட்டிகளாக வேடமிட்டுக் கொண்டவர்கள் நடமாடுவதை அவளால் சகிக்க முடியவில்லை.
கூவியழைத்து அனைவரையும் ஒன்றுகூட்டி அந்தச் சிவனடியார்களை வளைத்துக் கொள்ளலாமா என்று எண்ணினாள்; இப்படிச் செய்தால் இருங்கோவேளின் சூழ்ச்சி அம்பலமாகாது போய்விடும். அவனும் விழித்துக் கொண்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வழி வகுத்தது போலாகிவிடும் எனப்பயந்து அந்த அடியார்களைப் பின் தொடர்ந்தாள்.
மருவூர்ப்பாக்கம் தாண்டி அந்த அடியார்கள் பட்டினப்பாக்கத்துப் பக்கம் சென்றார்கள். வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நடுங்கல் மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் முதலிய இடங்களைக் கடந்து சென்ற அவர்களை அவள் விடாமல் தொடர்ந்தாள். வெள்ளிடை மன்றத்தைக் கண்டதும் அவளுக்குக் கண்கலங்கிற்று. அந்த மன்றத்தின் பெருமையை நினைத்துப் பெருமூச்செறிந்தாள். அந்த மன்றத்தில் யார் வேண்டுமானாலும் தங்களுக்குரிய வியாபாரச் சரக்குகளை மூட்டைகளாகக் கட்டி, உரியவர் பெயரை எழுதி அங்கேயே போட்டு விட்டுத் தங்கள் வேலைகளைக் கவனிக்கலாம்; அந்த மன்றத்திற்கு கதவுமில்லை; காவலும் இல்லை. அப்படியிருந்தும் ஒரு மூட்டையும்