86
கலைஞர் மு. கருணாநிதி
பாண்டியனின் இருப்பிடத்திற்கு வந்துசேர்ந்தான். "செழியன் காணாமற் போனதைத் தவிர வேறு எந்தக் குறையும் தனக்கில்லை' யென்று பாண்டியன், சோழனிடம் மனம் விட்டுப் பேசினான்.
"செழியனைப் பற்றியும் சோழ மண்டலத்தைக் கவிழ்க்க நடை பெறும் சூழ்ச்சித்திட்டங்களைப் பற்றியும் தகவல் அறிந்து வரப் பொறுப்பு வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும் “செழியனைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம்” என்றும் கரிகாலன், பெருவழுதிக்கு ஆறுதல் கூறினான். பின்னர் பாண்டிய நாடு, சோழபூமி இரண்டின் உறவு முறைகள் பற்றியும், நட்பு உடன்பாடுகள் பற்றியும் நீண்ட நேரம் பேசினர். தங்களின் ஒற்றுமைக்கும், இரு நாடுகளின் நட்புக்கும் வழி கோலிய புலவர் காரிக்கண்ணனார் பற்றி இருவரும் புகழ்ந்துரைத்தனர்.
"காரிக்கண்ணனாருக்கு ஒரு மகளிருக்கிறாள். அவள் பெயர் முத்துநகை. அவளுடைய திருமணத்தை இந்த நாட்டு இளவரசியின் திருமணம் போல் அவ்வளவு சிறப்பாகச் செய்து முடிக்கப் போகிறேன்" என்றான் கரிகாலன்.
"அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. ஆனால் ஒன்று; அந்தத் திருமண ஏற்பாட்டை என்னைக் கலக்காமல் துவங்கி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றான் பெருவழுதி.
கரிகாலனும் சிரித்தபடியே, "அதற்கென்ன ஆகட்டும்!" எனப் பதில் கூறினான்.
பாண்டியன் குழுவினரும், பரிவாரங்களும் நீண்ட தூரம் சென்று கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்த பிறகே கரிகாலன் திரும்பினான். திரும்பியவன் திகைத்திடும் வண்ணம் ஒரு வீரன் மிக வேகமாகக் குதிரையில் வந்து கரிகாலனை வணங்கி நின்றான்.
"யார் நீ" என்று கரிகாலன் கேட்பதற்குள், அந்த வீரன் தன் கையிலிருந்த ஓலைச் சுருளை எடுத்து நீட்டினான். அரசன் அதை ஆவலுடன் வாங்கிப் படித்தான்.
"சோழமன்னர் கரிகாலருக்கு வரைவது யாதெனில்- பாண்டிய வீரன் செழியன் என்னிடம் தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறான். அவனை உயிரோடு பாண்டியனிடம் நீர் ஒப்படைக்க வேண்டுமானால், என்னுடைய நாட்டை என்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் செழியனைச் சித்திரவதை செய்து அணு அணுவாகக் கொல்ல உத்தேசம்! உடனே பதில்-செயல் மூலம்!"
-இருங்கோவேள் மன்னன்."