பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31

கொண்டே இருந்தார். வீரர்களே, வெற்றி நமக்கு நிச்சயம், தேசபக்தியுடன் தொடர்ந்து போரில் ஈடுபடுங்கள்; என்று முழக்கமிட்டபடியே களவீரர்களை ஊக்குவித்தார்.

போர் வீரர்களும் ‘நாங்கள் நாட்டுக்காக சாகத்தயார்’ என்ற கூக்குரலோடு டால்ஸ்டாய் முழக்கத்திற்குப் பதில் கூறிக் கொண்டே யுத்தம் செய்தார்கள். இருந்தாலும் யுத்த களத்தின் கோரச் சாவுகள் தளத்தில் எழுந்த தீனக் குரல்களின் முனகல்கள், ரத்தம் தேங்கும் களக் காட்சிகள், கைவேறு கால்வேறு என்று அறுபட்ட அங்கங்களின் துள்ளல்கள், துடிப்புகளைக் கண்டு அவர் மனம் வேதனைப்பட்டு கண்ணீரைச் சிந்தியது.

ருஷ்யர்கள் பெற்ற போர் வெற்றிக்காக ஓரிடத்தில் வீரர்களுக்குப் பாராட்டும் விருந்தும் நடைபெற்றது. என்றாலும், அதில் டால்ஸ்டாய் கலந்து கொள்ளவில்லை. போர் முனைக் காட்சிகளைக் கண்ட அவர் நெஞ்சு; தீராத துயரைப் பெற்றது. அதனால், இரவு பகலாக நெஞ்சம் நெகிழ்ந்து அல்லலுற்றார்.

போர் வீரர்களைப் பலிகொடுத்துவிட்டு, துடிக்கும் அவயவங்களின் துள்ளல் மீது நமக்கு விருந்தா? கேளிக்கைக் கூத்தா? என்று அவர் அந்த வெற்றி விழாக்கூட்டத்தை விட்டே வெளியேறி விட்டார். உடனே, செபாஸ்டபூல் நகருக்குச் சென்று, போரில் படுகாயமடைந்த வீரர்களுக்கு பணிவிடைகளைச் செய்தார். தனது உயிரைப் பணயம் வைத்தே இந்த போர்க்கள உதவிகளைத் துணிந்து செய்தார்.

இந்தப் போர்க்கள வாழ்க்கையை அவர் கட்டுரைகளாக எழுத ஆரம்பத்தார். எப்போது அவர் யுத்தகளப் பணியில் சேர்ந்தாரோ, அன்று முதல் தனக்குள் கிளர்ந்து எழுந்த எண்ண எழுச்சிகளை எழுத்தில் வடிக்கலானார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள், அவர் எழுதும் முதல் எழுத்துப் பணியாக உருவெடுத்தன.