பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

83

போது, பலர் உண்ண உணவின்றி, செய்ய வேலையின்றி, குடியிருக்க வீடின்றி வாடிக் கொண்டிருக்கும் நிலைகள் இருப்பது ஏன்? இந்த சமுதாயத் தேவைகளை எப்படித் தீர்ப்பது? என்ற கேள்விகளை எழுப்பி, அந்த வினாக்களுக்குரிய விடைகளையும் தெளிவு படுத்தியுள்ளார்.

வாழும் மக்கள் அனைவருக்கும் பசிக்கு உணவும், மானத்தைக் காத்துக் கொள்ள சாதாரண உடைகளும், இயற்கையின் சீற்றங்களுக்கப் பலியாகாமல் தங்களைக் காத்துக் கொள்ள படுக்க உறைவிடமும் பொதுவான வாழ்க்கை உரிமைகள். இந்தத் தேவைகளை எந்த அரசும் உடனடியாகச் செய்யாவிட்டால் அது கொடுங்கால் ஆட்சியே தவிர வேறு என்ன பெயரிடலாம்? என்றும் டால்ஸ்டாய் மக்கள் உரிமைகளுக்காக அந்தப் புத்தகத்திலே வாதாடியிருக்கிறார்!

டால்ஸ்டாய் தான் எழுதியுள்ள உலகம் போற்றும் புத்தகங்களான “போரும் அமைதியும், ஆன்ன கரீனா, க்ரூசர் சோனாடா” போன்ற மற்றும் பல நூல்களைப் பற்றி, என்றுமே தன்னைத்தானே புகழ்ந்து கொண்டதே இல்லை. நான் எழுதிய அவற்றையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், “இந்தப் புத்தகம் எனக்குப் பிறகும் வாழும்”, என்று “ஏ சைக்கிள் இன் ரீடிங்” என்ற நூலினைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்த நூல் இயற்றியதைத் தவிர, வேறு நற்பணிகளைச் செய்ய அவர் உடல் இடந்தரவில்லை. தமது கொள்கையினைப் பற்றின சிந்தனையிலேயே அவர் லயித்தார்.

நாடெங்கிலும் இன்று இயேசு பிரானைப் பின்பற்றும் பாதிரிமார்கள் நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கின்றோம். இயேசு சபைகள் தோன்றுவதற்கும், அதனைச் சார்ந்த மத குருமார்கள் ஆற்றிவரும் மதப் பணிகளுக்கும் காரணமாக இருப்பதும் ஒரு புத்தகம் தான்.