பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

95

வைக்காமல், அவற்றின் மூலமாக வரும் வருமானம் அனைத்தையும் ஏழை மக்களின் எளிய வாழ்க்கையின் உயர்வுக்காகவே எழுதி வைத்தார்! இந்த அறவழி உணர்வுகளுக்குத் தனது குடும்பத்தையே பலி கொடுத்துவிட்டார். அத்தகைய ஏழை பங்காளர் மறைந்தார் என்றதும் உலக நாடுகள் எல்லாம் அறிவுக் கண்ணீர்த் துளிகளை உகுத்தன.

இந்திய விடுதலையின் தேசியத் தந்தை என்று இன்றும் உலகத்தவரால் போற்றப்படும் ஞான மகான் காந்தியண்ணல், டால்ஸ்டாய் என்ற மனித நேய ஞானியை, அகிம்சா அறத்தை முதன் முதல் உலகுக்கு ஈந்து அதற்கோர் மரியாதையை, மக்களிடையே உருவாக்கிக் காட்டி மதிப்பும் மரியாதையும் பெற்ற மாவீரன் டால்ஸ்டாயை, தனது குருநாதர் என்று கூறிப் போற்றி அவரது அறவுண்ர்ச்சிச் சுவடுகளிலே வழி நடந்து வெற்றியும் பெற்று வாழ்ந்து காட்டின அத்தகைய அகிம்சா மூர்த்தி காந்தியாரின் குருநாதரான டால்ஸ்டாய் மறைந்து விட்டார்.

உலகம் இன்றும் அவரை ஒரு பெரிய இலக்கிய ஆசிரியராக மதித்துப் போற்றி வருகின்றது. அவருடைய எழுத்துக்களாலான இலக்கியச் செல்வங்கள் அறிவுலகின் முடிகளாகச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுக்கு உலகம் வணக்கம் செலுத்துகிறது காலத்தையும் தாண்டி லியோ டால்ஸ்டாயிக்கு மதிப்பும் மரியாதையும் நிலைத்து நிற்கும்.

இலக்கியப் பணி அவரது புகழுக்குரிய சிறந்த படிக்கட்டுகளாக அமைந்தது! ஆனால், அந்த மகானின் மனித நேய ஞானத்தின் மக்கட் பணிதான் உலகப் புகழுக்குரிய வைர முடியாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.