பக்கம்:லேசர் அறிவியல்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் முதல் நூல் பதிப்புச் செம்மல் தமிழவேள் ச. மெய்யப்பன் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' எனப் புதுமைக்கவி பாரதி பாடியதற் கொப்பப் புத்தம் புதிய அறிவியல் செய்திகள், "இலேசர் அறிவியல்' என்னும் இந்நூலில் கொடுக்கப்படுகின்றன. எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நோக்கி மணிவாசகர் பதிப்பகம் தன் மொழிக் கடமையாக இந்த அரிய நூலைப் பெருமிதத்துடன் வெளியிடுகிறது. ஒரு நூற்றாண்டாக அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருந்தாலும் இந்நூற்றாண்டில் பெருகிய வளர்ந்த விரிந்த அறிவியல் ஆய்வுகள் ஒப்புமை சொல்ல முடியாதவை. கணிப்பொறி கண்டுபிடிப்பு புதிய படிகத்தில் ஒரு திருப்பு முனை. கணிப்பொறி புகாத துறையில்லை. கணிப்பொறியின் ஆட்சி, கடவுளின் ஆட்சிபோல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சியால் மனிதகுலம் வசதிக்காகப் பெற்ற கருவிகள் பல; நேரத்தையும் தூரத்தையும் வெல்ல கண்ட கருவிகள் பல. எல்லாவற்றையும் விட மனிதகுலம் நோய்களின் துயரங்களிலிருந்தும் விடுதலை அடையக் கண்டுபிடித்த மருத்துவ அறிவியலின் சாதனை மகத்தானது. நல்வாழ்வு, ஆயுள் நீட்டிப்பு முதலியவற்றோடு தீராத நோய்களுக்குத் தீர்வு காணவும் கண்டறிய முடியாத நோய் உயிரிகளை, நோய் முதலியவைகளைக் கண்டறிந்து மனிதகுல மகிழ்ச்சிக்கும் உய்வுக்கும் வழிகாட்டிய கருவிகளில் இலேசர் கருவி முதன்மையானது. நுண்மையில் உண்மை வாய்ந்ததும் ஒளிமை உடையதும் உயர்சிறப்பு உடையதும் இக்கருவி. ஒளியின் செறிவு, ஒருதிசைச் செலவு, சிதறலில்லாத போக்கு முதலிய பண்புகள் இலேசரின் நுண்ணமைப்பாகும். 400க்கு மேற்பட்ட அமெரிக்க அறிவியல் அகங்களில் 2000க்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்ந்து கண்டு பலவகைகளில் இலேசரின் பல்வகைப் பயனைப் பெருக்கினர். இச்சீரிய நூலை இயற்றிய ஆசிரியர் அ.கி. மூர்த்தி அறிவியல் அறிஞர். அறிவியலுக்காகத் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/5&oldid=887020" இலிருந்து மீள்விக்கப்பட்டது