பக்கம்:லேசர் அறிவியல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர். விருதுபெற்ற தலைமை ஆசிரியர். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரைகளைத் தமிழாக்கம் செய்தவர். அண்ணாவின் மேடைத் தமிழை மேன்மைமிகு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். பல்லாயிரம் சொற்களைக் கொண்ட அறிவியல் அகராதியைத் தமிழில் முதல் முதலில் உருவாக்கிய பெருமையர். விஞ்ஞானத்தின் நுட்பம் உணர்ந்த வித்தகர். அறிவியலில் ஆழங்கால் பட்டவர். எதனையும் எளிதாக விவரிக்க வல்லவர். இவர்தம் அறிவியல் நூல் பணிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. தமிழ்வழி அறிவியல் விரும்பு வோர்க்கு இந்நூல் வழிகாட்டி. நூலைப் பகுத்துள்ள திறமும் செய்திகளைத் தொகுத்துள்ள திறமும் ஆசிரியரின் அறிவியல் ஆளுமைக்குக் கட்டியம் கூறுகின்றன. எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதிய ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கட்டுரையையோ, ஒரு நூலையோ பார்த்து எழுதிய நூல் அன்று. வளர்ந்து வரும் இலேசர் அறிவியல் துறையின் நுணுக்கங் களை உள்வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட முதல் அறிவியல் நூல். ஆசிரியர்தம் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நூலைப் படிப்போர் எளிதில் உணர்வர். அறிவியல் நலம் சான்ற நல்லாசிரியரை இனம் கண்டு அவர் அரிதின் முயன்று உருவாக்கிய அரிய நூலை உரிய காலத்தில் வெளியிட்டு மணிவாசகர் பதிப்பகம் பெருமையும் பேருவகையும் கொள்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வாளர்களுக்கும் இவ்வகை நூல்கள் விரும்பிப்படித்துப் பயன்பெறத் தக்கவை என்பது என் உறுதியான நம்பிக்கை. அறிவியலை அறிவோம் தாய்மொழிவழி சிந்திப்போம் தமிழ்வழி புதுமை படைப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/6&oldid=887041" இலிருந்து மீள்விக்கப்பட்டது