பக்கம்:வசந்த மல்லிகா.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறியலும் வறையலும்

167

முடிவாகத் தோன்றியது. ஆதலால், அவர்கள் கலங்கி ஓட்டின் மீது நின்றனர். இரண்டொரு நிமிஷத்தில் கொட்டகை முழுதும் பற்றிக் கொண்டு இடியோசை போன்ற வெடிச் சத்தங்களுடன் எரிய, அதன் ஜ்வாலை ஆகாயத்தை அளாவியது. நெருப்புத் துண்டுகள் ஆகாயமெல்லாம் நிறைந்தன. அந்தப் பெருத்த சொக்கப் பானைக்கு மிக்க அருகிலிருந்தமையால் அவர்கள் பட்ட பாட்டைச் சொல்ல நாவெழவில்லை. ஆதலால், படிப்போரே அரை மனதால் பாவித்துக் கொள்வது நன்று. அவர்களிருவரும் அவ்விதம் நெருப்பில் வறுபட்ட வண்ணம் ஒரு நாழிகை நேரம் ஓட்டின் மீது மதிலோடு மதிலாக ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

அங்ஙனம் அவர்களது நிலைமை அப்படி இருக்க, ஜனங்கள் வெளியில் போவதற்குள் பலர் நசுக்குண்டனர்; பலர் கை கால்களை இழந்தனர்; எண்ணிறந்தோர் பாயிஸா கேப்புகளிருந்த இடத்தில் கூட்டம் இல்லாதிருந்தமையால், அவர்கள் ஸுலபமாக அரண்மனைக்குள் போய்ச் சேர்ந்து, நெருப்பை அணைக்கும்படி ஜனங்களைத் தூண்ட, எல்லோரும் குடங்களை எடுத்துக் கொண்டு ஓடி பக்கத்தில் இருந்த குளத்தில் இறங்கி ஜலமெடுத்து வந்து நெருப்பில் பெய்தார்கள். அவர்கள் எவ்வளவோ பாடு பட்டு முயன்றும், நெருப்பு அடங்காமல் மகா உக்கிரமாகப் பற்றி எழுந்து பரவியது. சிலர் தமது கைகளில் அகப்பட்ட பொருட்களை வெளியில் எடுத்துப் போயினர். பலர் ஓலமிட்டு அலறினர். வெளியில் போன ஜனங்கள் கொட்டகை முழுவதும் எரிந்ததைக் கண்டு, "ஐயோ! ஸஞ்சலாட்சியைக் காணோமே! அவள் தப்பினாளோ இல்லையோ தெரியவில்லையே!" என்று கூக்குரலிட்டு அங்கும் இங்கும் ஓடி ஓடிப் பார்த்தனர். எவ்விடத்திலும் அவளைக் காணாமல் அவர்கள் மகா சங்கடமான துன்பக் கடலில் ஆழ்ந்தனர். அவளைத் தவிர மற்ற எல்லா நடிகர்களும் கோவிந்தசாமி ராவும் தப்பி வந்திருந்ததைக் கண்ட ஜனங்கள் அவளுக்காக மிகுந்த விசனமும் இரக்கமும் கொண்டு ஏங்கித் தவித்தார்கள். கொட்டகை முழுவதும் எரிந்து கீழே விழுந்து அடங்கும் வரையில் ஜனங்கள் எல்லோரும் அவ்விடத்தை விட்டுப் போக மனமற்றவராய் அப்படியே நின்று கொண்டிருந்தனர். கொட்டகை முழுதும் எரிந்து வீழ்ந்த பின், நெருப்பு தணியவே சிலர் தற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/185&oldid=1233856" இலிருந்து மீள்விக்கப்பட்டது