பக்கம்:வசந்த மல்லிகா.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

வஸந்தமல்லிகா

கோபத்தினால், அவரது மனம் கொதித்தது. அவர் உண்மையை மறைத்து, பொய் பேசுகிறார் என்று நினைத்தமோகனராவுக்கும் ஆவேசம் அதிகரித்தது.

மோக : (ஏளனமாக) உனக்கு அவளை எப்படித் தெரியப் போகிறது! பவானியம்மாள்புரத்திலிருந்து ரகஸியமாக அழைத்துக் கொண்டு வந்து, அவளுடைய கற்பை அழித்து ஓட்டிவிட நினைத்த சேதாரப் பயலே! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? உன்னுடைய கைவரிசை எல்லாம் யாரிடத்தில் காட்டுகிறாய்? உனக்கு அவ்வளவு அகமா? ஒரே குத்தில் உன்னுடைய குடலைக் கலக்கி விடுகிறேன் பார்! துஷ்டப் பயலே! ஜெமீந்தாரா நீ! உன்னைப் பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறதடா! - என்று சொல்லிக் கொண்டே கோபாவேசத்துடன் சண்டைக்கு நெருங்கினார்.

அதைக் கேட்ட வஸந்தராவும் கோபாவேசத்தினால் தம்மை முற்றிலும் மறந்தார். அவரது தேகம் துரும்பாக மெலிந்திருப்பினும் அவர் நல்ல வீரராதலால் மரியாதைக் குறைவான வார்த்தைகளைக் கேட்கப் பொறாமல் மோகனராவைத் தண்டிக்க வேண்டும் என்று துடிதுடித்து நெருங்கினார்.

இருவரும் தம்மை மறந்து ஒருவரை ஒருவர் வாயில் வந்த விதம் திட்ட ஆரம்பித்தனர். வாய்ச்சண்டை முற்ற கையுத்தம் செய்யத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் கட்டி உருட்டியும், புரட்டியும், அடித்தும், குத்தியும் சண்டை செய்து மணலில் விழுந்து புரண்டனர்; அவர்கள் செய்த பெருத்த ஆரவாரத்தைக் கேட்டு பாட்டையில் சென்ற சில வழிப்போக்கர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களுடன் வந்த ஒரு யௌவன மங்கை சண்டை செய்தவர்கள் இன்னார் என்பதை அறிந்து கொண்டு வீரிட்ட சப்தத்தோடு ஆத்திரமாக ஓடி வந்து அவர்களுக்கிடையில் விழுந்து, அவர்களைப் பிரித்து விட முயன்றாள். வஸந்தராவ் நிரம்பவும் மெலிந்து இளைத்திருந்ததை அறிந்தவளாதலால், அவள் அவரைப் பிரித்து அப்பால் செலுத்த முயன்றாள். அந்தச் சமயத்தில் மோகனராவ் தனது வீராவேசத்தில் தம்மை மறந்து, வஸந்தராவை ஓங்கிக் குத்த முயல, அந்தக் குத்து, குறுக்கில் விழுந்த அந்த ஸ்திரீயின் மார்பில் பட்டது; அவள், "ஐயோ செத்தேன்!" என்ற கூச்சலுடன் மூர்ச்சித்துக் கீழே விழுந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/224&oldid=1234002" இலிருந்து மீள்விக்கப்பட்டது