பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வஞ்சிமாநகரம்


 நிறைந்திருக்கிற சமயத்தில் அதற்குத்தக்க தீர்திறனாகக் கொடுங்கோளுர்க் குமரனை அழும்பில்வேள் தேர்ந்தெடுப்பார் என்பது பலர் எதிர்பாராத ஒன்று. வேளாவிக்கோ மாளிகையிலும், கனகமாளிகைச் சுற்றுப் புறங்களிலும் வஞ்சிமாநகர அரச கரும வட்டங்களிலும் இச் செய்தி வியப்பையே அளித்தது.

மகோதைக் கரை என்று அழைக்கப்பட்டுவந்த மேற்குக் கடற்கரை நகரங்களும், சிற்றுார்களும் பேரூர்களும் எக்காலத்திலும் - கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் குறும்பர்கள் தொல்லையை அறிந்திருப்பினும் பேரரசர் தலைநகரில் இல்லாத காலமென்ற காரணத்தில் எங்கும் பரபரப்பு அதிகமாயிருந்தது. நதிகளின் முகத்துவாரங்களிலும் கரையோரத்துக் கடற்பகுதிகளிலும் அதிகமான படகுகளும் மரக்கலங்களும், நாவாய்களும் போக்குவரவு இருக்கும். இப்போது சில நாட்களாக அந்தக் கலகலப்பான கடற்பகுதிகளும் முகத்துவாரங்களும் எதையோ எதிர்ப்பார்த்துச் சூழ்ந்துவிட்ட பயங்கரத்துடனும், தனிமையுடனும் காட்சியளித்தன. வெறிச்சோடிப் போயிருந்த கடற்கரைப் பகுதிகளும், முகத்துவாரப் பகுதிகளும் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தன.

அமைச்சர் அழும்பில்வேளின் ஆணைபெற்றுக் கொடுங்கோளுர்க் குமரனை அழைத்து வருவதற்காகச் சென்ற வலியனும் பூழியனும் கடற்கரைப் பகுதிகளிலும் முகத்துவாரங்களிலும் ஏற்பட்டிருந்த இந்த மாறுதல்களை எல்லாம் கவனித்தார்கள். வஞ்சிமாநகரையும் கொடுங்கோளுரையும் இணைத்த சாலை மிகவும் அழகானது. இருமருங்கிலும் அடர்ந்து செறிந்த பசுமையான மரங்கள் அணிவகுத்தாற்போல் அழகுற அமைந்திருந்தன. வலியனுக்கும் பூழியனுக்கும் அத்தகைய சாலையில் குதிரையில் செல்வதே சுகமாக இருந்தது. ஆயினும் எங்கும் நிலவிய சூழ்நிலை மட்டும் மனநிறைவு தருவதாக இல்லை. யானைப்பாகர் சிலர் மட்டும் தங்களுடைய முகபடாமணிந்த யானைகளோடு சாலையில்