பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

101



தனால் சிதறி நிலை குலைந்தனர். அந்த அகால வேளையில் கடம்பர்கள் இதை முற்றிலும் எதிர்நோக்கி இருக்கவில்லை. ஒரு படகு ஆற்றில் கவிழ்ந்தது. சிலர் இறந்தனர். நீந்திக் கரையேறியவர்களை கொடுங்கோளுர் வீரர்கள் உடனே சிறைப் பிடித்தனர். ஆற்று முகத்துவாரத்து வழியே நீந்திக் கடலுக்குள் போய்த் தப்பிவிடலாமென்று புறப்பட்ட சில கடம்பர்களையும் நீரில் குதித்து மறித்துச் சிறைப்பிடித்தார்கள் கொடுங்கோளூர் வீரர்கள்.

விடிவதற்குள் அந்த முகத்துவாரத்துப் போர் முடிந்துவிட்டது. கடம்பர்களில் இறந்தவர்கள் தவிர எஞ்சியோரைச் சிறைப்பிடித்தாயிற்று.

இனி அமுதவல்லியைத் தேடிப் புறப்படவேண்டியதுதான் என்று தனக்குள் சிந்தித்தான் குமரன் நம்பி. படகுகள் ஆயத்தமாயின. கொடுங்கோளூர் வீரர்கள் யாவரையும் படகுகளில் அணியணியாகப் பிரித்து அமரச்செய்தான் தலைவன். கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்கள் முற்றுகையிட்டிருந்த கடற் பகுதியை நாலா திசைகளிலிருந்தும் வளைத்துக் கொண்டு ஒரே சமயத்தில் தாக்க வேண்டுமென்று தன் வீரர்களுக்குக் கூறியிருந்தான் படைத் தலைவன். கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களில் ஒன்றுகூடத் தப்பிச் சென்று விடாமல் எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு தாக்க வேண்டு மென்பதும் யாவருக்கும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. தாக்குதல் முடிந்ததும் ஒவ்வொரு கொள்ளை மரக்கலத்தையும் சோதனையிட்டுத் தேடவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

எல்லா இடங்களுக்கும் துரத்தித் துரத்தி உடன் வந்த அமைச்சர் அழும்பில் வேளின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் என்ன காரணத்தினாலோ கடலுக்குள் படகுகள் புறப்பட்டபோது மட்டும் மெல்ல நழுவி விலகிச் சென்று விட்டார்கள்.