பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

103



பொருள்களுடனும் - சிறைப்பிடித்த, பகைவர் நாட்டு ஆடவர், மகளிருடனும் கூடிய மரக்கலம் கொள்ளையும் போரும் முடிவடைவதற்கு முன்பே சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று பத்திரமாக துறையையடையும்படி கடத்தப்பட்டுவிடும். ஆனால் என்ன காரணத்தினாலோ இம்முறை முதலில் எத்தனை கொள்ளை மரக்கலங்கள் துறைக்கு வந்தனவோ அத்தனை மரக் கலங்களுமே அப்படியே இருந்தன.

முதல் நாள் அந்த மரக்கலங்களில் ஒற்றறிவதற்காகச் சென்றபோது ஒரு காரியத்துக்காக அவற்றை எண்ணிக் கணக்கிட்டு வைத்துக்கொண்டான் குமரன் நம்பி. இப்போதும் அந்த மரக்கலங்கள் அப்படியே இருந்தன. ஒரு வேளை கடம்பர்கள் தங்களுடைய தோல்வியைப் பற்றித் தாங்களே இன்னும் சரியாக அறியவில்லையோ என்று தோன்றியது படைத் தலைவனுக்கு. அவர்கள் எந்த விநாடியிலும் தங்கள் கொள்ளை மரக்கலங்களோடு திரும்பி ஓடலாமென்ற கருத்தில்தான் தன்னுடைய வீரர்களையும், படகுகளையும் வில்லம்புகளோடும் வேறு பல படைக்கலங்களோடும் கடம்பர் கலங்களை நான்கு புறமும் வளைக்குமாறு வகுத்துக் கொண்டு முன்னேறினான் அவன்.

முதல் நாள் இரவு முழுவதும் பொன்வானி ஆற்றுமுகப் புதரில் மறைந்திருந்தும் கடம்பர்களை எதிர்த்துப் போரிட்டுக் களைத்திருந்தாலும் படை வீரர்களோ, தலைவனோ ஒய்ந்து விடவில்லை. கடம்பர் கொள்ளை மரக்கலங்களைக் சூறையாடப் போகிறோம் என்ற உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அருகில் நெருங்குகிறவரை கடம்பர் மரக்கலங்கள் அமைதியாயிருந்தன. சுற்றி வளைத்துக்கொண்டதும் கடம்பர்களும் ஒன்று சேர்ந்து தம் மரக்கலங்களின் மேல் தளங்களின் வில்லம்புகளோடு தோன்றினார்கள். போர் மூண்டது. குமரன் நம்பி எதிர்பார்த்தது போல் மரக்கலங்களில் மீதமிருந்த கடம்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.