பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வஞ்சிமாநகரம்


 எனவே முதலில் சோதனைசெய்து முடித்த மரக்கலத்தை - அப்படியே ஆந்தைக்கண்ணன் முதலியவர்கள் தப்பி ஓடுவதற்குக் கொடுத்துவிடலாம் என்பது குமரன் நம்பியின் எண்ணமாயிருந்தது.

“சிறைப்பட்ட கடம்பர்களையும் அவர்களுடைய தலைவனான ஆந்தைக்கண்ணனையும் இங்கு அழைத்து வாருங்கள்” என்று தன் வீரர்களுக்கு அவன் கட்டளையிட்டான்.

ஆந்தைக்கண்ணன் கைகள் பிணிக்கப்பட்டுத் தன் எதிரே கொண்டுவரப் பட்டபோது “நீ கொடுங்கோளுரிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டுவந்த இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை எந்தக் கப்பவில் அடைத்து வைத்திருக்கிறாய் என்பதை மறைக்காமல் உடனே சொல்லிவிடுவது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” என்று அவனை நோக்கிச் சீறினான் குமரன் நம்பி.

இந்த வினாவைச் செவிமடுத்ததும் ஆந்தைக்கண்ணனின் உருண்டை விழிகளில் கனல் பறந்தது.

“என்ன உளறல் இது படைத்தலைவரே? கொடுங்கோளுருக்குள் வருவதற்கு முன்பே எங்கள் கதி இப்படி ஆகிவிட்டது. நாங்களாவது இரத்தின வணிகர் மகளைச் சிறைப்பிடிப்பதாவது நாங்களல்லவா இப்போது உங்களிடம் சிறைப்பட்டுத் தவிக்கிறோம்? அப்படியிருக்கும்போது படைத்தலைவர் கூறும் செய்திகள் புதுமையாக அல்லவா இருக்கின்றன?” என்று கொதிப்போடு கூறினான் அவன்.

ஆனாலும் குமரன் நம்பிக்கு அவன் கூறியதில் உடனே நம்பிக்கை உண்டாகவில்லை. மீண்டும் இரைந்து கூப்பாடு போட்டான். “கடம்பர்கள் கொள்ளையடிப்பார்கள் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன். இப்போதோ அவர்கள் பொய் சொல்லுவார்கள் என்றும் தெரிகிறது.”