பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

125



காதலுக்கும் அதன் சுகதுக்கங்களுக்கும் அந்த உணர்வை ஆள்பவர்கள்தான் சொந்தக்காரர்கள். இன்னொருவனுடைய துணையை அதற்கு நாட முடியாது போலும் என்றெண்ணி அந்த உணர்வுகளைத் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டான் படைத் தலைவன்.

பேரரசர் வெற்றி வாகையோடு நகர்ப் பிரவேசம் செய்த தினத்தன்று மாலையில் அரண்மனைக் கொலு மண்டபத்தில் வெற்றி மங்கலவிழா நிகழ்ந்தது. புலவர்கள் பேரரசருடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிப் பரிசில்கள் பெற்றனர்.

பாணர்களும், பாடினிகளும் அரசருடைய வெற்றியை இசைத்துப் பரிசில் பெற்றனர். கூத்தர்களும், விறலியர்களும் அரசர் பெருமானுடைய வெற்றியை ஆடிக்களித்து மகிழ்ந்தனர். அந்த ஆட்டத்துக்கு வெகுமதியாகப் பரிசும் பெற்றனர்.

இறுதியாகப் படை வெற்றிக்குத் துணையாக இருந்த வீரர்களுக்கும் படையணித் தலைவர்களுக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன.

இறுதியாக அமைச்சர் அழும்பில்வேள் முன்வந்து “கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன் குமரன் நம்பி, கடற் கொள்ளைக்காரர்களை வென்ற வெற்றிக்காக ஈடு இணையற்ற பரிசுப்பொருளைப்பெற இப்போது வருமாறு அழைக்கிறேன்” என்று கூறியவுடன் குமரன் நம்பி தயங்கித் தயங்கி அடக்க ஒடுக்கமாக நடந்து முன் வந்தான்.

அமைச்சர் அரசவையின் உள்ளே நுழையும் வாயிற்புறத்தில் நின்ற ஒரு பணிப் பெண்ணை நோக்கி ஏதோ சைகை செய்தார்.

அவள் ஒரு விநாடி உள்ளே மறைந்தாள். அடுத்த விநாடி அந்தப் பணிப்பெண் அழைத்துவந்து நிறுத்தியவளைப் பார்த்த போது குமரன்நம்பியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆம்! கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி