பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

11



“விவரம் தெரியாமல் பேசுகிறாயே பூழியா! உலகில் ஏற்படும் காதல் நிகழ்ச்சிகளே பெரும்பாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்...”

“என்ன இருந்தாலும் நம் குமரன் நம்பிக்கு வாய்த்த காதலியைப் போல் இத்தனை பேரழகி உலகில் வேறெங்குமே இருக்க முடியாது.”

“அப்படியானால் கொடுங்கோளுர்ப் படைக்கோட்டப் பாதுகாப்பைவிட இந்தக் காரியத்தை நம் குமரன் நம்பி செம்மையாச் செய்யமுடியுமென்று சொல்!”

“கோட்டைவிடுகிறவர்கள் அதாவது ஒரு பெண்ணிடம் தங்கள் சொந்த மனத்தையே கோட்டை விடுகிறவர்கள் எங்காவது கோட்டையைப் பாதுகாக்க முடியுமா?”

“பொறு ! அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்ளுகிறார்கள், கேட்போம்.”

“காதலர்கள் இருவரும் பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்பது பாவம்.”

“பாவமோ, புண்ணியமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது.இந்தப் பேச்சை ஒட்டுக் கேட்டால்தான் நாம் அமைச்சர் பெருமானிடம் திரும்பிச் சென்று ஏதாவது விவரங்கள் கூற முடியும்...”

“இதை எல்லாம் அமைச்சர் பெருமானிடம் கூறினால் அவருக்குக் கொடுங்கோளுர்க் குமரன் மேலிருக்கிற சிறிதளவு நம்பிக்கையும்கூடப் போய்விடும் பாவம் !”

“விளைவுகளைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஒற்றர்கள் என்ற முறையிலே எது நம் கடமையோ அதை நாம் செய்தாக வேண்டும்.”