பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வஞ்சிமாநகரம்



பூழியனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பொருள் பொதிந்த புன்னகை புரிந்தனர். அப்படியே செய்வதாகவும் கூறிவிட்டுப் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் கொடுங்கோளூர் நகரெல்லையைக்கூடக் கடந்திருக்கமாட்டார்கள். அதற்குள் பயங்கரமான செய்தியொன்று கடற்கரைப் பக்கமிருந்து படைக்கோட்டத்துக்கு வந்துவிட்டது.


3. ஆந்தைக் கண்ணன்

மேற்கே கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில் தீப் பந்தங்களோடு கூடிய கொள்ளைக்காரர்களின் படகுகள் தெரிவதாகக் கடற்கரைப் பாதுகாப்புப் படையினர் வந்து தெரிவித்தபோது கொடுங்கோளுரில் பரபரப்பு அதிகமாகி விட்டது. அந்த நிலையில் குமரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமைச்சர் பெருமானுடைய அழைப்பை ஏற்று உடனே வஞ்சிமாநகரம் செல்வதா அல்லது கொடுங்கோளூரிலேயே தங்கிக் கடற்கரையிலும் முகத்துவாரத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகமாக்குவதா? எதைச் செய்வது என்று சிந்தித்து மனம் குழம்பினான் அவன்.

அமைச்சருடைய கட்டளையை அலட்சியம் செய்தது போலவோ, புறக்கணித்தது போலவோ, விட்டுவிடுவதும் ஆபத்தில் வந்து முடியும் என்பது அவனுக்குத் தெரியும். அமைச்சர் பெருமானைச் சந்தித்துவிட்டு இரவோடிரவாகத் திரும்பிவிடலாமென்று அவன் எண்ணினான். படைக் கோட்டத்திலிருந்த வீரர்களையெல்லாம் ஒன்று சேர்த்து உடனே செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வஞ்சிமாநகர் புறப்பட்டான் அவன். புறப்படுவதற்கு முன் எப்படியாவது அமுதவல்லியைச் சந்திக்க வேண்டும் என்று அவன் முயன்ற முயற்சி வீணாகிவிட்டது. அந்த அகாலத்தில் இரத்தின வணிகருடைய மாளிகையைத் தேடிச்