பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வஞ்சிமாநகரம்


 கொடுங்கோளுரிலிருந்து வஞ்சிமாநகரத்துக்குப் பயணம் செய்யும் வேளையில் வாயு வேகமாகிப் பறக்கும் புரவி மீது அமர்ந்திருந்தாலும் மனம் அமைதி இழந்திருந்தது. சேர நாட்டுப் பேரமைச்சர் அழும்பில்வேள் என்ன கட்டளையிடுவாரோ - எவ்வெவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்வாரோ என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டே சென்றபடியினால் பயணத்தில் நினைவு அழுந்தியிருக்கவில்லை. முன்னால் சென்ற தூதர்களான வலியனும் பூழியனும் அமைச்சர் பெருமானிடம் என்ன கூறியிருப்பார்களோ என்ற தயக்கமும் அச்சமும் கூடக் குமரனிடம் இருந்தது. பேரரசரும் பெரும்படைத் தலைவரும் கோநகரிலிருக்கும் சமயமாயிருந்தால் இப்படி அமைச்சர் பெருமான் தன் வரைக்கும் கீழிறங்கிக் கட்டளையிடத் துணிந்திருக்கமாட்டார் என்பதைக் குமரன் உணர்ந்துதான் இருந்தான்.

வஞ்சிமாநகரம் நெருங்க நெருங்க அவன் கவலை அதிகரித்தது. கோட்டை கொத்தளங்களும் மாடமாளிகைகளும், கூட கோபுரங்களுமாக இரவின் விளக்கொளி விநோதங்களோடு வஞ்சிமாநகரம் தென்படலாயிற்று. வேளாவிக்கோ மாளிகையில் வந்து அமைச்சர் அழும்பில்வேளைச் சந்திக்குமாறு அவருடைய ஒற்றர்களும் தூதுவர்களுமான வலியனும் பூழியனும் கூறிவிட்டுச் சென்றிருந்ததை நினைவு கூர்ந்தபடியே நகருக்குள் நுழைந்தான் குமரன். தலைநகரத்தின் வீதிகள் திருவிழாக்கோலம் பூண்டவைபோல் தோன்றின. பேரரசர் தலைநகரத்தை விட்டுப் பல காத துரம் சென்றிருக்கும்போதே இப்படியென்றால் அவர் கோநகரில் இருந்தால் நகரம் இன்னும் எத்துணை மங்கலமாக இருக்கும் என்பதை எண்ணிக் கற்பனை செய்து பார்த்தான் குமரன். ஒளிமயமான இரத்தின வணிகர் வீதி, முத்துவணிகர் வீதி, பொன் வணிகர் வீதி முதலியவற்றைக் கடந்து பூக்களும் சந்தனமும், பிற வாசனைப் பொருட்களும் விற்கும் வீதியில் அமுதவல்லியை நினைவு கூர்ந்து வேளாளர் தெருக்களையும், அந்தணர் தெருக்களையும் கண்டபின் அரச வீதிகளில் புகுந்தான்