பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

19



குமரன். அரசவீதியின் நீளமும் அகலமும் இரு மருங்கிலும் நிரம்பியுள்ள - நிமிர்ந்து பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும் கட்டிடங்களும் குமரனை மருட்டின.

எங்கும் அகிற்புகை வாசனை, மாடங்களில் எல்லாம் விதவிதமான விளக்கொளிகள், அங்கங்கே மணியோசைகள், இனிய மங்கல வாத்தியங்களின் ஒலிகள், வேளாவிக்கோ மாளிகையும் அரண்மனையாகிய கனக மாளிகையும் அருகருகே இருந்தன. இரவு நேரமாக இருந்துங்கூட அரச கம்பீரம் நிறைந்த அந்த மாளிகைகளின் முன்றிலுக்கு வந்தவுடன் குமரனுக்கு மலைப்புத் தட்டியது. இரவில் யாரும் அடையாளம் கண்டு தன்னிடம் பேசவர வாய்ப்பில்லாத அந்த இடத்தில்கூட கட்டிடங்களின் பெருமிதத் தோற்றத்திற்கு முன் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தான் அவன்.

வேளாவிக்கோ மாளிகைக்குச் செல்லுமுன் பல அரங்க மேடைகளையும், அத்தாணி மண்டபங்களையும், வேத்தியல் நடனசாலைகளையும், பூங்காக்களையும், வாவிகளையும் கடந்து செல்லவேண்டியிருந்தது. கனக மாளிகையாகிய அரண்மனைப் பகுதிக்கும், வேளாவிக்கோ மாளிகைக்கும் இடையே அடர்ந்த மரத்தோட்டம் இருந்தது. அந்த மரக் கூட்டங்களுக்கு அப்பால் முகில்கள் மறைத்த வெண்மதிபோல் அழகிய வேளாவிக்கோ மாளிகை தெரிந்தது. வேளாவிக்கோ மாளிகையருகில் சிறிது தொலைவில் பேரரசரின் வசந்த மாளிகையாகப் பயன்படும் இலவந்திகை வெள்ளிமாடம் அமைந்திருந்தது. சேர அரசர்களோ, அமைச்சர் பெருமக்களோ தேர்ந்தெடுத்த காரியங்களை மட்டுமே வேளாவிக்கோ மாளிகையில் வைத்துப் பேசுவது வழக்கம். ஆந்தைக்கண்ணனின் கொள்ளைக் கூட்டத்தை ஒடுக்குவது பற்றித் தன்னிடம் பேசுவதற்கு அமைச்சர் வேளாவிக்கோ மாளிகையைத் தேர்ந்தெடுத்ததிவிருந்தே அதன் இன்றியமையாமையைக் குமரனும் உணர்ந்து கொண்டிருந்தான்.