பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

21



களைப் பற்றியும், அமைச்சர் அழும்பில்வேள் மனிதர்களைப் பரீட்சை செய்து தேறும் விதங்களைப் பற்றியும் கொடுங்கோளுர்க் குமரன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். ‘தன்னிடம் பேசவேண்டிய செய்திகளைத் தனது ஏவலாளர்களிடமே பேசி முடித்துவிடுகிற ஒரு படைத் தலைவனைப் பற்றி அமைச்சர் அழும்பில்வேள் என்ன நினைப்பார்?’ என்பதை எண்ணியே அவன் நடுங்கவேண்டியவனாக இருந்தான். அவர்களோ அவனை மேலும் மேலும் சோதனை செய்தார்கள்.

“கொடுங்கோளுர் ஆந்தைக்கண்ணன் கையில் சிக்கிற்றானால் அதன்பின் சேரநாடே ஒன்றுமில்லை என்றாகிவிடும். எப்பாடுபட்டாவது முதலில் கொடுங்கோளுரைக் காப்பாற்றி விட வேண்டும். அதன் பெருட்டுத்தான் அமைச்சர் பெருமான் எங்கள் இருவரையும் அவ்வளவு அவசரமாக அனுப்பினார்” - என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்கள். அதற்கெல்லாம் பிடிகொடுத்துப் பதில் கூறாத குமரன், “இவ்வளவு அவசரமாக என்னை வரவழைத்த அமைச்சர் பெருமான் இரவிலேயே எனக்கான கட்டளையை இட்டு என்னைக் கொடுங்கோளூருக்கு அனுப்பியிருப்பாரானால் மிகவும் நல்லதாகியிருக்கும். நான் அதிக நேரம் இங்கே தங்கத் தங்கக் கொடுங்கோளூர் நிலைமையைப் பற்றிய கவலைதான் என் மனத்தில் அதிகமாகிறது” - என்று மட்டும் பலமுறை அவர்களிடம் வற்புறுத்தி வினவினான். அதற்கு அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு அவன் திடுக்கிட்டான். ‘தங்களைப் போலவே கவலை மிகுந்து கொடுங்கோளூர் நிலைமையை அறிந்து வர அமைச்சர் பெருமானே அங்கே சென்றிருக்க நியாயமிருக்கிறதல்லவா?’ - என்று சிரித்துக் கொண்டே குமரனைக் கேட்டார்கள் அவர்கள். ‘விளையாட்டாக அப்படி அவர்கள் கூறுகிறார்களா? அல்லது தன்னை ஆழம் பார்க்கிறார்களா’ என்று புரியாமல் திகைத்தான் குமரன். “பேரமைச்சருக்குக் கொடுங்கோளுர் வரவேண்டுமென்ற உத்தேசம் இருந்திருக்குமானால் அடியேன் அங்கேயே அமைச்சர் பெருமானை எதிர்கொண்டு சந்தித்திருப்பேனே?” என்று