பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

27



“பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை ! சேர நாட்டிலேயே அழகான பெண்கள் கொடுங்கோளுரில்தான் இருக்கிறார்கள் என்று கூறிப் பெருமைப்பட்டேனே?”

“ஆம்! பெருமைப்பட்டீர்கள். அதற்கும் கொடுங்கோளுரில் நேற்றிரவு நடைபெற்ற சம்பவத்திற்கும் என்ன தொடர்பு?”

“தொடர்பு இருப்பதனால்தான் சொல்கிறேன் குமரன் நம்பி! கொடுங்கோளூரிலேயே அழகிற் சிறந்த பெண்ணொருத்தியைக் கடற்கொள்ளைக்காரர்கள் கொண்டுபோய்விட்டார்கள் ! அதை. நினைக்கும்போதுதான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது.”

“அப்படி ஒன்றும் நடந்திருப்பதற்கே சாத்தியமில்லையே? ஏனென்றால் நான் அங்கிருந்து புறப்படும்போதே கொள்ளை மரக்கலங்கள் கடலில் வெகுதுரத்தில் அல்லவா இருந்தன?”

“என்ன நடந்தது? எப்படி அந்தப் பெண்ணைச் சிறைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. கடற்கரைப் பக்கமாக உலாவப் போனவளைக் காணவில்லை என்று இரத்தின வணிகர் மனம் குமுறிக் கொண்டிருக்கிறார்.”

“என்ன? இரத்தின வணிகரா?”

“ஆம்! கொடுங்கோளுரிலேயே பெரிய இரத்தின வணிகரின் மகளான அமுதவல்லியைத்தான் காணவில்லை. கடற் கொள்ளைக்காரர்களான ஆந்தைக்கண்ணனின் ஆட்கள்தான் சிறைப் பிடித்துக்கொண்டு போயிருக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள்.”

“ஆ” என்ற அலறல் குமரனின் வாயில் சொல்லாக ஒலிக்கத் தொடங்கித் தடைப்பட்டது. அவன் முகத்திலிருந்த தடுமாற்றத்தைக் கவனித்த அமைச்சர் பெருமான், “ஏன் இவ்வளவு பதற்றமடைகிறாய்? உனக்குக் கொடுங்கோளுர் ரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைத் தெரியுமோ?” என்று கேட்டுவிட்டு அவன் நிலையைக் கூர்ந்து கவனிக்கலானார் அமைச்சர்.