பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வஞ்சிமாநகரம்



கூறிவிட்டுப் புன்னகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தார் அமைச்சர். அவர் மனத்தில் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு பேசுகிறாரென்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்த நிலையில் அவரோடு அதிகம் பேசி விவாதிக்க விரும்பவில்லை அவன். ஆனால், குமரனின் மனத்திலோ சீற்றம் பொங்கிக் கொண்டிருந்தது.

அமுதவல்லி சிறைப்பட்டாள் என்றறிந்ததனால் வந்த சீற்றத்தை அமைச்சரின் உரையாடல்கள் வேறு அதிகமாக்கின. ஆனாலும், தன் சினம் வெளியே தெரியாமல் அடக்கிக் கொண்டு அவருக்குப் பணிந்தான் அவன். உடனே அவன் அங்கிருந்து கொடுங்கோளுருக்குப் புறப்பட விரும்பியதற்குக் காரணம், கடற்கொள்ளைக்காரர்களை எதிர்த்து அடக்கும் நோக்கம் ஒன்றுமட்டுமல்ல, வேளாவிக்கோ மாளிகையிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறிவிடவேண்டும் என்பதும் ஒரு நோக்கமாயிருந்தது. எத்தனை பெரிய தீரனாக இருந்தாலும் வேளாவிக்கோ மாளிகைக்குள் நுழைந்துவிட்டால் அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். பிறர்மேல் கோபம் வருவதற்குப் பதில் தனக்குத் தன்மேலேயே ஒரு கையாலாகாத கோபம் வரும். இதனால் எல்லாம்தான் குமரனுக்கு அங்கிருந்து விரைவில் வெளியேற வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

நண்பகலில் குமரன் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து புறப்பட முடிந்தது. அமைச்சர் பெருமானின் கட்டளைப்படி வலியனும் பூழியனும் கூட உடன் வந்தார்கள். வஞ்சிமா நகர எல்லையைக் கடக்கிறவரை புரவிகளை விரைவாகச் செலுத்திக் கொண்டு போகமுடியவில்லை. அரசவீதிகளும் வாணிகப் பெருந் தெருக்களும் கலகலப்பாயிருந்தன. நகர எல்லையைக் கடந்ததும் கொடுங்கோளுருக்குச் செல்லும் சாலையில் விரைந்து செல்ல முடிந்தது. வழியில் எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் கொடுங்கோளுர் நிலையைப்பற்றி அவர்கள் கேட்டறிந்தார்கள்.