பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

35



காரர்கள் யாரும் தங்கியிருப்பதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. தீவோரமாக நிறுத்தியிருந்த மரக்கலங்களில் எந்த மரக்கலத்தில் கொள்ளைக்காரர்கள் தலைவனாகிய ஆந்தைக் கண்ணன் தங்கியிருப்பான் என்று அநுமானம் செய்ய முனைந்தான் குமரன். முதலில் அது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. நேரம் செல்லச் செல்ல கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. இறுதியில் குமரனே தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு அதை மற்றவர்களுக்கு விவரித்தான்.

“நண்பர்களே ! நீங்கள் யாவரும் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் நான் திரும்பி வருகிறவரை கண்டிப்பாக இங்கிருந்து அசையக் கூடாது. நான் திரும்புவதற்குத் தாமதமானால் நீங்களாகவே எனக்கு ஏதேனும் அபாயமென்று கற்பனை செய்து கொள்ளவும் வேண்டியதில்லை. படகைமட்டும் நான் கொண்டு செல்வேன். அடையாளமாக நான்-உங்களை இருக்கச் சொல்கிற இடத்திலேயே நீங்கள் இருக்கவேண்டியது மிகமிக அவசியம். ஏனெனில் நான் எந்த அவசரத்தில் திரும்பி வந்தாலும் நீங்கள் உடனே என்னோடு புறப்பட ஆயத்தமாயிருக்க வேண்டும். திரும்பி வந்து நான் தீவில் இறங்கி உங்களைத் தேடும்படி ஆகிவிடக் கூடாது.”

அவன் கூறியபடியே ஆயத்தமாயிருக்க அவர்கள் இணங்கினர். குமரன் படகில் புறப்பட்டான். அந்தக் கொள்ளை மரக்கலங்களுக்கிடையே செல்வது மிகவும் கடினமாயிருந்தது. சில மரக்கலங்களில் உருவிய வாளுடன் கடம்பர்கள் காவலுக்கு நின்றார்கள். இன்னும் சில மரக்கலங்கள் அமைதியடைந்திருந்தன. தான் அந்த நிலையில் அப்போது மிகமிக அபாயமான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் குமரன் ஒவ்வொரு கணமும் உணர்ந்தான். கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களுக்கு இடையேதான் படகில் செல்வதை அவர்களில் யாராவது பார்த்து விட்டால் என்ன ஆகும் என்பதை நினைக்கத் தொடங்கிய போதே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது.