பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வஞ்சிமாநகரம்



கொள்ளைக்காரர்களுடைய முற்றுகையைத் தகர்த்துத் தன் ஆருயிர்க் காதலியும் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகளுமாகிய அமுதவல்லியைச் சிறைமீட்டு - வேளாவிக்கோ மாளிகை என்னும் அரச தந்திரக்கூடத்தில் அமைச்சர் அழும்பில்வேளை வெற்றிப் பெருமிதத்தோடு சந்திக்கலாம் என்ற எண்ணத்திலிருந்த அவனுக்கு இந்த ஏமாற்றம் அதிர்ச்சியை அளிப்பதாயிருந்தது. இனி உடனடியாக என்ன செய்வது என்பதை அவன் விரைந்து முடிவு செய்யவேண்டிய நிலையில் இருந்தான். விடிவதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும் அல்லது கரையடைவதற்கும் திரும்புவதற்கும் முயற்சியாவது மேற்கொள்ள வேண்டும். விடிந்தால் உட்புறக் கடலின் நெடுந்தொலைவில் இருக்கும் இவர்கள் படகுகள் கரையை ஒட்டி இருக்கும் கடம்பர்களுக்கு மிகவும் தெளிவாகத் தென்படலாம். அதனால் அவர்களே இவர்களைக் கரையடைய விடாமல் வழிமறிக்கவும் நேரிடலாம்.

‘என்ன செய்வது?’ - என்று சிந்தனைக் குரியதாக இருந்தது. உடன் வந்தவர்களில் படகோட்டிகளைத் தவிர மற்றவர்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய விரும்பினான் குமரன் நம்பி.

“கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை வளைத்து விரட்டுவதற்கு எதுவும் செய்யாமல் இப்படியே இருளோடு இருளாகக் கரைதிரும்புவோமானால் இரண்டு இரவுகள் அயராது கண் விழித்துப் பாடுபட்டது வீணாகிவிடும். மறுபடியும் நாளை நாம் திட்டமிடுவதற்குள் எது-எது எப்படி எப்படி இருக்குமோ? இப்போதே நாம் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் கடம்பர்கள் மகோதைக் கரையை நெருங்கிய முறையில் தங்கள் முற்றுகையை மாற்றிக் கொண்டார்கள். ஆகவே வந்தது வந்துவிட்டோம், முடிந்ததைச் செய்ய முயன்று பார்க்கலாமா? உங்கள் கருத்து என்ன? இதில் எந்த அளவு நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் திட்டமாயிருக்கிறீர்கள்?” - என்று அவர்களை நன்கு உணர்வதற்காக வினவினான் குமரன் நம்பி.