பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

57



‘இந்தக் கப்பல்களில் ஏதோ ஒன்றில் அமுத வல்லி சிறைப்பட்டிருந்தும் அவள் எங்கே எப்படிச் சிறைப்பட்டிருக்கிறாள்? அவளை எவ்வாறு விடுவிப்பது?’ என்ற கவலைகள் அவனை வாட்டின. நகரத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கவலைகள் ஒரு பக்கம் என்றால் இதயத்தைக் கவர்ந்தவளைத் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டிய கவலைகள் மற்றொரு பக்கம் சூழ்ந்தன. கடம்பர்களின் கட்டுக்காவலோ மிக அதிகமாகவும் கடுமையாகவும் இருந்தன. தப்புவதற்கான வழிகள் அரிதாயிருந்தன.

பகலில் அவர்களுக்கு முறையாக உணவு கூட வழங்கப்படவில்லை. நாற்றிசையும் கடல் நீரைத் தவிர உதவிக்கு வருவார் யாரும் தென்படாத நிலையில் இரவை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருந்தான் குமரன் நம்பி. அவனுடைய பயமெல்லாம் அமைச்சர் அழும்பிள்வேள் தன்னைப் பக்குவ மடையாத விடலைப்பிள்ளை என்று கூறும்படி வாய்ப்பளித்து விடலாகாதே என்பதுதான்.

அவர்கள் கொடுங்கோளுரில் இருந்து கொண்டு வந்திருந்த படகுகளை எல்லாம் ஆந்தைக்கண்ணன் கைப்பற்றிக் கொண்டதோடு மட்டும் அன்றிப் படகோட்டிகளையும் சிறை படுத்திவிட்டான். குமரன் நம்பி முதலிய வீரர்களை ஒரு மரக் கலத்திலும், இவர்களுக்குப் படகோட்டி வந்தவர்களை வேறொரு மரக்கலத்திலுமாகப் பிரித்துப் பிரித்துச் சிறை வைத்திருந்ததனால் ஒருவரோடொருவர் சந்திக்கவும் வாய்ப்பின்றி இருந்தது.

நேரம் ஆகஆகத் தப்பிக்கவும்-திரும்பவும் முடியுமென்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. கதிரவன் மறைகின்ற நேரமும் நெருங்கியது. கடம்பர்களின் கொள்ளை மரக் கலங்களில் மறுநாள் கொடுங்கோளூர் நகரைக் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடுகள் தீவரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லோரும் தப்ப முடியாவிட்டாலும் யாராவது ஒரிருவர் தப்பினாலும் போதும் என்ற குறைந்த