பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க நூல்களையும் இடைக்கால இலக்கிய-இலக்கணங்களையும் முறையோடு பூரணமாகக் கற்றுத் தேர்ந்து பண்டிதப் பரீட்சையில் வெற்றி பெற்றவர் திரு. நா. பார்த்தசாரதி.

சங்க இலக்கியங்களில் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு மூன்று தமிழ் மன்னர்களின் தலைநகரங்களைப் பற்றியும் தனித்தனியே மூன்று நாவல்கள் எழுத வேண்டும் என்ற திரு. நா. பா. வின் திட்டப்படி மூன்றாவது நாவல் இது. ‘மணி பல்லவம்’ சோழப் பேரரசின் தலைநகரைப்பற்றிப் பேசுகிறது. பாண்டியர்களின் பழம்பெரு நகரான ‘கபாடபுரம்’ இரண்டாவது நாவலாக உருப்பெற்று விட்டது. கடல் பிறக் கோட்டிய சேரர் பெருமான் செங்குட்டுவனின் காலச்சூழ்நிலையை விளக்குகிறது இந்த ‘வஞ்சிமாநகரம்’.

இந்தச் சுவையான நாவலைத் தொடராகத் தமது சிங்கப்பூர் “தமிழ் முரசு” நாளிதழில் வெளியிட்டு மலைநாடெங்கும், மற்றொரு மலைநாடுடைப் பேரரசன் சேரன் செங்குட்டுவனின் புகழ் பரப்பிய திரு. சாரங்கபாணி அவர்கட்கும், இந்த வரலாற்று நாவலை நூல் வடிவில் வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த ஆசிரியர் திரு. நா. பா. அவர்கட்கும் எங்கள் உள்ளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.

சென்னை கண. முத்தையா
9–2-68 தமிழ்ப் புத்தகாலயம்