பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

63



குமரன் முதலில் ஒருமுறை நிலைமையறிவதற்காகக் கடலுக்குள் சென்றுவந்தது தவிர மீண்டும் சில வீரர்களோடு கடம்பர் மரக்கலங்கள் உள்ள கடற்பகுதிக்குப் போயிருக்கிறான். போன இடத்தில் அவனுக்கும் அவனுடன் சென்றவர்களுக்கும் என்ன நேர்ந்ததென்றே இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒரு மாறுதல் மட்டும் மாகோதைக் கரை மக்கள் யாவரும் வெளிப்படையாகக் காணும்படி நேர்ந்திருக்கிறது. முன்பு கடலில் வெகுதொலைவில் ஒரு தீவினருகே நின்றிருந்த கடம்பர் மரக்கலங்கள் இப்போது கொடுங்கோளுருக்கும், முசிறிக்கும் மிக மிக அருகே நெருங்கியிருக்கின்றன. இந்தச் செய்தியைத் தம்முடைய அந்தரங்க ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் அனுப்பியிருந்ததனால் ஒரு வார்த்தையும் மிகையாகவோ, குறைவாகவோ இருக்குமென்று தோன்றவில்லை.

‘குமரன் தன்னுடன் சென்றவர்களோடு கடம்பர்களிடம் பிடிபட்டிருப்பானோ?’ என்ற சந்தேகமும் அவர் மனத்தில் இருந்தது. தலைநகரத்தில் பேரரசரும், படைத் தலைவரும், பிறரும் உள்ள நேரமாயிருந்தால் அமைச்சர் அழும்பில்வேன் மிக மிக இன்றியமையாத இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு இப்படிக் குமரன் நம்பியைப் போன்ற ஓர் இளைஞனை நம்பி அனுப்பியிருக்க மாட்டார். ஆனால் யாரும் தலைநகரில் இல்லாத நிலையை எண்ணி இருப்பவர்களைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது.

எனவேதான் குமரன் நம்பியையும் நம்பி அந்தப் பாதுகாப்பில் அவனுடைய சொந்தக் காதலியே முதலில் பாதிக்கப்பட்டிருப்பதையும் அவன் கவனத்துக்குக் கொண்டு வந்து - அதன் பின் அவனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அனுப்பி யிருந்தார் அமைச்சர். பொதுக்காரியமாக உள்ள ஒன்றை ஆற்றவேண்டியவனிடம் அதை அவனுடைய சொந்தக் காரியமாகவும் மாற்றி ஒப்படைக்கும்போது அதற்கு இரட்டைப் பொறுப்பு வந்து விடுகிறது. குமரன் நம்பியும் அன்று வேளாவிக்கோ மாளிகையில் தன்னைச் சந்தித்தபோது அத்தகைய பொறுப்போடும், உணர்ச்சி