பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

65



கொடுங்கோளுருக்கு உடன் சென்ற பூழியனும் வலியனும் அங்கே படைக் கோட்டத்தில் இருப்பதால் சமயோசிதமாக ஏதாவது செய்து அவர்கள் நகரத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. நல்ல வேளையாக எல்லா நிலையிலும், எல்லாச் சமயங்களிலும் குமரன் நம்பியோடு உடன் செல்வதே தங்கள் கடமை என்று எண்ணி அந்த இருவரும் கடம்பர் மரக்கலங்கள் இருந்த கடற்பகுதிக்குச் சென்று அகப்பட்டுக் கொண்டு விடவில்லை என்பது அமைச்சருக்கு நம்பிக்கை அளித்தது. அவர்களும் கடற்பகுதிக்குச் சென்று குமரனைப்போல் திரும்பாமலிருந்தால் தமக்குச் செய்தி தெரியவும், தாம் செய்திகளைத் தெரிவிக்கவும், கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தில் நம்பிக்கை வாய்ந்த மனிதர்களே இல்லாமல் போயிருப்பார்கள் என்பதை அமைச்சரும் உணர்ந்துதான் இருந்தார். அமைச்சர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் கடம்பர் மரக்கலங்களில் இருந்த குமரனும் அவனுடன் சென்றவர்களும் என்ன ஆனார்கள் என்பதை இனிமேல் கவனிக்கலாம்.


12. குமரன் திரும்புகிறான்

தங்கள் தலைவனாகிய கொடுங்கோளுர் குமரன் நம்பி ஆந்தைக்கண்ணனுக்கு விட்டுக் கொடுத்து அப்படித் திடீரென்று மனம் மாறியதைச் சிறைப்பட்டிருந்த சேரநாட்டு வீரர்கள் யாருமே விரும்பவில்லை.

‘என்னை உங்கள் வீரர்களோடு பொன்வானி முகத்துவாரத்திற்கு அனுப்புங்கள் வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன்’ என்று குமரன் நம்பியே ஆந்தைக்கண்ணனிடம் முகமலர்ச்சியுடனே வேண்டியபோது யாராலும் அதை நம்பமுடியவில்லை. முதலில் ஆந்தைக்கண்ணனே அதை