பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

67



“இந்தப் படைத்தலைவன் உங்களோடு வருகிறான் என்பதற்காக இவனையே முற்றிலும் நம்பிவிடாதீர்கள். பொன் வானி முகத்துவாரத்தை நெருங்கியதும் இவனை உடன்வைத்துக் கொண்டு என்னென்ன நிலைமைகளை அறிந்து கொள்ள முடியுமோ அதை மட்டுமே அறிந்து வாருங்கள். முகத்துவாரத்தின் வழியே கரைப் பகுதியில் அதிகமாக உள்ளே நுழைந்து விடவும் கூடாது. அப்படிச் செய்தால் ஒருவேளை நீங்களே இங்கே திரும்பி வரமுடியாத நிலைமைகள் ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடலாம்” என ஆந்தைக்கண்ணன் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்ட போது அந்தக் கட்டளையின் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு சொல்லின் பொருளையும், பொருளுக்குப் பின்னிருந்த தொனியையும், அதற்குப் பின்னாலிருந்த அரச தந்திரக் குறிப்புகளையும் குமரன் நம்பி கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

“கடம்பர்களே! நாம் கொடுத்து வைத்தவர்கள், ஏனென்றால் நமது முற்றுகையைக் கரையிலிருந்து எதிர்த்து முறியடிக்க வேண்டிய சேரநாட்டு கொடுங்கோளுர்க் கோட்டையின் படைத் தலைவனே நமக்குத் துணையாக கரைவரை வரப்போகிறான் என்பது எவ்வளவு பெரிய உதவி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வீரர்களில் யாராவது உயிருக்குப் பயந்து அல்லது பொன்னை, பொருளை தயந்து துரோகிகளாக மாறுவார்கள். நாமோ ஒரு கட்டத்தின் தலைவனே துரோகியாக மாறி நமக்கு உதவிபுரிய முன்வருமாறு சந்தர்ப்பத்தை உண்டாக்கிவிட்டோம்” என்று கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் கூறியபோது, அதைக் கேட்டுத் தனக்குள் நகைத்துக் கொண்டான் குமரன் நம்பி.

குமரன் நம்பியோடு உடனிருந்தவர்களோ வெறுப்பையும் கடந்து இப்படியும் ஒரு பச்சைத் துரோகம் உண்டா? என்று வெறுக்கும் எல்லையிலிருந்து விரக்தி எல்லைக்குப் போய் நினைக்கத் தொடங்கியிருந்தார்கள்.