பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வஞ்சிமாநகரம்



“ஏன் இப்படி அடிக்கடி ஐயப்படுகிறீர்கள்? ஆற்றின் இரு புறமும் பசுமை செழித்து அடர்ந்திருப்பது நல்ல வளத்தின் காரணமாகத்தானேயன்றி வீரர்கள் மறைந்திருந்து தாக்குவதற்காக அன்று.”

“அதற்காக சொல்ல வரவில்லை. சேரநாட்டில் மிகக் குறைந்த வீரர்கள்தான் இருப்பதாக நீயே கூறியதால் தந்திரமான வழிகளில் அன்றி வேறு விதங்களில் அவர்கள் பகைவர்களை எதிர்த்துச் சமர் புரிய முடியாது. தந்திரமாகச் சமர் புரியும் வழிகளில் இதுவும் ஒன்று. இருபுறமும் நெருங்கிய மரக்கூட்டங்களிடையே உள்ள பொன்வானியாற்றுக் கால் வழியே நாம் போகிறபோது நம்மை வளைக்க முடியுமென்று தான் இதைக் கேட்டோம். இதற்கு நீ சொல்லும் மறுமொழியிலிருந்துதான் நாம் உள்ளே எவ்வளவு துரம் போகலாம் அல்லது போகக்கூடாது என்பதைப்பற்றி ஒரு முடிவு செய்யலாம்.”

“என்னை நம்பி நான் எவ்வளவு தூரம் உங்களை அழைத்துச் செல்கிறேனோ அவ்வளவு தூரம் நீங்கள் பயமின்றி வரலாம்.”

குமரன் இவ்வாறு கூறும்போது அவர்கள் சென்ற படகு பொன்வானி முகத்துவாரத்திற்குள் நுழைந்திருந்தது. கடம்பர்கள் குமரனின் முகத்தையே வைத்தவிழி வாங்காமல் நோக்கினர். அவன் உண்மையாகவே தங்களுக்கு எல்லாவற்றையும் காண்பிக்க அழைத்துக்கொண்டு போகிறானா அல்லது ஏமாற்றுகிறானா என்பதில் இன்னும் அவர்களுக்குச் சந்தேகம் தீரவில்லை.

“பெருமரக்கலங்களை கரையிலிருந்து சிறிது தொலைவில் ஆழமான கடற்பகுதியிலேயே நிறுத்தி வைத்துவிட்டுச் சிறு சிறு படகுகளில் பொன்வானி, ஆயிரை, பேரியாறு மூலம் சேரநாட்டு நகரங்களில் அங்கங்கே கொள்ளையிட நுழைந்தால் எங்களை எதிர்க்கப்போதுமான வீரர்கள் இருக்கிறார்களா அல்லது எங்கள் நோக்கம் ஈடேறுமா” என்று குமரனிடமே மறுபடியும் கேட்டான் ஒரு கடம்பன்.