பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வஞ்சிமாநகரம்



கொண்டு உண்மை நிலையை அறிவதற்காகக் கடம்பர்களில் ஒரு நூறு பேரைப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அனுப்பினாலும் அனுப்பிவிடலாம். அப்படி அவன் செய்துவிடுவானேயாகில் குமரன் எதற்காக இதைத் திட்டமிட்டுச் செய்தானோ அந்த ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகிவிடும். ஆனாலும் எதை எதிர் கொள்ளவும் துணிந்திருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு தான் அவன் இருந்தான்.

இதற்கிடையே அவன் இடுகிற ஒவ்வொரு திட்டத்தையும் செய்கிற ஒவ்வோர் ஏற்பாட்டையும் அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களாகிய வலியனும் பூழியனும் அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். கவனிப்பதெல்லாம் நடைபெறுவன பற்றிய செய்திகளை அமைச்சருக்கு அனுப்பவதற்குத்தான் என்பதைக் குமரன் நம்பி விளங்கிக் கொண்டான்.

ஒவ்வொன்றாகச் சிந்தித்துக்கொண்டே வரும்போது, புதிதாக வேறொரு கவலையும் அவனுக்கு உண்டாகியது. கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடலிலுள்ள தங்கள் கொள்ளை மரக்கலங்களில் ஏதாவது ஒன்றில் கடம்பர்கள் சிறை வைத்திருப்பார்களானால் அவளையும் அதிலிருந்து அந்தரங்கமாக விடுவித்தாக வேண்டும். எல்லாக் கடம்பர்களும் ஒரேயடியாக ஆந்தைக்கண்ணனோடு சிறுசிறு படகுகளில் பொன்வானி முகத்துக்கு வந்துவிடுவார்களேயானால் கடலில் அவர்கள் கலங்கள் தனியாயிருக்கும். இரண்டு மூன்று சேரநாட்டு வீரர்களோடு தானோ வேறு யாரோ, அவர்கள் கலங்களை தேடிப் - போனால் அமுதவல்லியை மீட்டிக்கொண்டு வந்துவிடலாமென்று தோன்றியது. ஆனால் கொடுத்தனுப்பியிருக்கும் ஓலைக்கு எதிர் விளைவாக ஆந்தைக்கண்ணன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் பொறுத்தே மேற்கொண்டு எதையும் திட்டமிடலாம் போலத் தோன்றியது. எக்காரணத்தைக் கொண்டாவது கடம்பர்கள் அஞ்சிக் கடலில் பின்வாங்குவார்களேயானால் அவர்கள் தங்கள் மரக்கலங்களைத் திருப்பிக்கொண்டுதான்